ரூ.20000 மேல் ரொக்க பரிமாற்றம் கூடாது.. சார் பதிவாளர்களுக்கு தமிழக பதிவுத்துறை போட்ட அதிரடி: பலே
சென்னை: தமிழகத்தில் பொதுமக்களின் நன்மை மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு, பதிவுத்துறையில் ஏராளமான சீர்திருத்தங்களும், மாற்றங்களும், அறிவிப்புகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.. ஏற்கனவே சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு ஆவணப்பதிவுகள் நடக்கின்றன.. இதைத்தவிர, விசேஷ நாட்களில் கூடுதலாகவே டோக்கன் வழங்கப்படுகின்றன.. இப்போது மேலும் ஒரு கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொத்து உள்ளிட்ட பத்திரப்பதிவு விவகாரங்களை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.. எனினும், சொத்துக்களை பதிய வேண்டுமானால் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டியுள்ளது.

அந்தவகையில், சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்துமே பதிவுத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.. தமிழகத்திலுள்ள 585 இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.. சொத்து விற்பனை மட்டுமல்லாது, திருமணப் பதிவு, சங்கங்கள், நிறுவனங்கள் பதிவு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணமும் இந்த அலுவலகங்களில்தான் பதிவாகின்றன..
பிறப்புச்சான்றிதழ்
பத்திரப்பதிவு, பிறப்புச்சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பதிவு, மற்றும் சங்கங்கள் பதிவு போன்ற பணிகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் என அனைத்து விதமான நில விவகாரங்கள், சொத்து விவகாரங்களுக்கு, சார் பதிவாளர் அலுவலகம்தான் செல்ல வேண்டியிருக்கிறது..
மேற்கண்ட விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் அணுகும்போது, அவர்களை நேரடியாகவே சார் - பதிவாளர்கள் சந்திக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அதேபோல, சார் - பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வினை, நேரடியாகவே அறிந்து கொள்ள, வீடியோ மூலம் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன..
ஏற்கனவே அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மூலம் செயல்பாடுகளை மட்டுமே கண்காணிக்க முடிந்தது. ஆனால், வீடியோவுடன் சேர்த்து குரல் பதிவும் கண்காணிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.. இதனை டிஜிபி அலுவலகத்திலிருந்தும், தலைமை அலுவலகத்திலிருந்தும் நேரடியாகவே அறிய முடியும்.
சில சார் - பதிவாளர்களின் ஒத்துழைப்புடன், விண்ணப்பதாரர்களுடன், வெளியாட்களும் அலுவலகத்துக்கு வந்து செல்வதால், வெளியாட்களின் நடவடிக்கையை தவிர்த்து, அதன்மூலம் லஞ்ச நடமாட்டத்தை வேரறுக்கவே இந்த புதி தொழில்நுட்பத்தை பதிவுத்துறை கொண்டுவந்துள்ளது. இதனால், சார் - பதிவாளர் அலுவலகத்தில் வெளிப்படை தன்மையும் உறுதி செய்யப்படுகிறது..
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சார்பதிவாளர் அலுவலகங்களில் 20,000க்கு மேல் ரொக்க பரிமாற்றம் நடந்தால் அதுகுறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
காரணம், வீடு, மனை விற்பனை உள்ளிட்ட நிகழ்வுகளில் பணப் பரிமாற்றம் அதிகமாக உள்ளது. இதில் கருப்பு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த, வருமான வரித்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சொத்து பரிமாற்றத்தின்போது, அதற்கான விலையாக கொடுக்கப்படும் தொகையில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்கம் அனுமதிக்க கூடாது என்ற விதிமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.. ஆனாலும், பல்வேறு இடங்களில் பத்திரங்களில் அதிக தொகை ரொக்கமாக பெறப்பட்டதாக குறிப்பிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவேதான், சொத்து விற்பனை பத்திரங்களில், ரொக்க பரிமாற்றம் கூடாது என்றும் அப்படி ஏதாவது நடந்தால், உடனடியாக தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவில், "சொத்து விற்பனை பத்திரங்களில், ரொக்க பரிமாற்றம் கூடாது. அவ்வாறு வந்தால், தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என, வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்த பதிவுத் துறைக்கு, உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
எனவே, அனைத்து சார் - பதிவாளர்களும், இது விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். பதிவுக்கு தாக்கலாகும் பத்திரத்தில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்க பரிமாற்றம் இல்லாததை, உறுதி செய்ய வேண்டும். இது விஷயத்தில் கவனக்குறைவாக செயல்படும், சார் - பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications