EXCLUSIVE: மெரினாவுக்கு பதில் கருணாநிதி நினைவிடத்திலேயே பேனா அமைக்க ஸ்டாலின் திட்டமா? உண்மை என்ன?
சென்னை: பேனா நினைவு சின்னம் திரும்பப்பெறப்படுகிறது அல்லது இடமாற்றப்படுவது தொடர்பாக எந்த ஆணையும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி மெரினாவில் உள்ளது. இங்கு தற்போது அவரின் பேனாவை சிலையாக வைக்க உள்ளனர். முன்னர் கருணாநிதியின் சமாதிக்கு முன்பாக பேனா சிலை வைக்கும் திட்டம் இருந்தது. தற்போது சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையிலும், வித்தியாசமாக நினைவிடம் அமைக்கும் வகையிலும்.. கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னத்தை நிறுவ முடிவு செய்துள்ளனர்.

கருணாநிதியின் சமாதியில் இருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது. இந்த பேனா சிலை 134 அடி உயரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடலில் திருவள்ளுவர் சிலை இருப்பது போல தளம் அமைக்கப்பட்டு அதில் பேனா இருக்கும். கருப்பு நிறத்தில் இந்த பேனா வைக்கப்பட உள்ளது. அதை சுற்றி தளம் அமைக்கப்பட்டு அதில் கார்டன் அமைக்கப்பட்டு இருக்கும். இதனால் மக்கள் பேனாவை தொட முடியாது.
இதற்கான அனைத்து விதமான அனுமதிகளையும் பெற்றுவிட்டனர். இந்த நிலையில்தான் இந்த திட்டத்தை கடலில் இருந்து கடலோர பகுதிக்கு மாற்றுவதாகவும், கடலில் வைக்காமல் சமாதி அருகிலேயே வைக்க அரசு திட்டமிடுவதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வெளியானது. அதாவது கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதில் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை என்று சோர்ஸ் சொல்வதாக செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. அதனை பல்வேறு ஊடகங்களும் ட்விட்டரில் பதிவு செய்தது.
ஆனால், பேனா சின்னத்தை கட்டமைக்கு பணிகளை கவனித்து வருகிற பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தால், " இது வரை அப்படி எந்த யோசனையும் உத்தரவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் இது பொய்ச்செய்தி " என்று சொல்கிறார்கள்.
அதேபோல, செய்தித்துறை தரப்பில் விசாரித்த போது, அரசு தரப்பில் இருந்து பேனா நினைவு சின்னம் திரும்பப்பெறப்படுகிறது என்று எந்த ஆணையும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்.
அதேசமயம், திமுகவின் மேலிட தொடர்பாளர்களிடம் பேசியபோது, "பேனா நினைவுச் சின்னம் குறித்து பொதுவெளியில் சர்ச்சையாவதை ஸ்டாலின் விரும்பவில்லை. இது பற்றி ஏற்கனவே இரண்டுமுறை சீனியர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போது சீனியர்கள், கலைஞருக்கென நாம் எடுக்கிற எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதை எதிர்க்கவும் சர்ச்சையாக்கவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.
அதையெல்லாம் யோசித்துக்கிட்டு இருந்தோம்னா கலைஞருக்காக எதையும் நாம் செய்ய முடியாது என ஸ்டாலினிடம் சீனியர்கள் சொல்லியுள்ளனர். அதனையடுத்து ஸ்டாலினும் அமைதியானார். இந்த சூழலில்தான், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி தந்தது. எந்த ரூபத்திலும் மத்திய அரசு தடை போடவில்லை.
அதனால், பணிகளை விரைவுப்படுத்துமாறு பொது பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலுவிடம் வலியுறுத்தினார். பணிகளும் விரைந்து நடந்து கொண்டிருக்கிறது. அதனால், திரும்பப் பெறலாமா என்ற யோசனை முன்பு இருந்தது. இப்போது அந்த யோசனை ஸ்டாலினுக்கு இல்லை. உண்மை இப்படியிருக்க ஏன் இப்படிப்பட்ட செய்திகள் எழுதப்படுகின்றன என தெரியவில்லை.
ஒருவேளை... ஸ்டாலினிடம் தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்கள் பேசி, அவர்களிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாரா? என்று தெரியவில்லை. ஆனா, இப்போது வரை அதிகாரப்பூர்வமாக ஸ்டாலினுக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவோ, அரசு தரப்பில் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவோ எங்களுக்கு தெரியவில்லை " என்கிறார்கள் திமுகவின் மேலிட தொடர்பாளர்கள்.












Click it and Unblock the Notifications