18 வயதுதான்.. இணை நோய் இல்லை.. ஆனால் கொரோனாவால் பலி.. அப்படி என்ன வகை கொரோனா தமிழகத்தில் பரவுகிறது?
சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர் கொரோனா காரணமாக உயிரிழப்பு பதிவாகி உள்ள நிலையில், உயிரிழந்த பெண் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மே மாதம் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. டெல்டா கொரோனாவை போல ஓமிக்ரான் கொரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இதன் காரணமாக ஓமிக்ரான் காரணமாக ஏற்பட்ட மூன்றாம் அலை மிக விரைவாகக் கட்டுக்குள் வந்தது. இதனால் கட்டுப்பாடுகளும் மெல்லத் தளர்த்திக் கொள்ளப்பட்டது.

குறைந்த கொரோனா
அதன் பின்னர் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல நாட்கள் தொடர்ச்சியாக வைரஸ் பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகி வந்தது. இதனால் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தனர். இந்தச் சூழலில் மீண்டும் மெல்ல வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது அடுத்த அலையின் தொடக்கமாக இருக்குமோ என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

மீண்டும் அதிகரிப்பு
தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நேற்று 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 221 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல நேற்றைய நிலவரப்படி 1,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாகச் சென்னையில் 984 பேரும், செங்கல்பட்டில் 375 பேரும், கோவையில் 118 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக எவ்வித உயிரிழப்பும் பதிவாகாமல் இருந்தது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் கொரோனாவால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நுரையீரல் பாதிப்பு காரணமாக இரு நாட்களுக்கு முன்பு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

இணை நோய்
இதையடுத்து மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், உயிரிழந்த இந்த தஞ்சை பெண்ணுக்கு எந்தவித இணை நோயும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

எந்த வகை
மேலும், கொரோனாவால் உயிரிழந்த இளம்பெண் எந்த வகையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதைக் கண்டறிய அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. தற்போது ஓமிக்ரான் BA4 மற்றும் BA5 வகை கொரோனாவே அதிகம் பரவுவதால் இந்த வகை பாதிப்பே அவருக்கு ஏற்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேக்சின்
இவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் இவர் எந்த வேக்சின் போட்டுக் கொண்டார். வேக்சின் எடுத்துக் கொண்டு எவ்வளவு நாட்கள் ஆகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கொரோனா உயிரிழப்பு மீண்டும் பதிவாகி உள்ள நிலையில், சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications