"இந்துக்களுக்கு தமிழ்நாட்டில் சுதந்திரம் இல்லை.. திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க” - எச்.ராஜா ஆவேசம்!
சென்னை: "இந்துக்களுக்கு தமிழ்நாட்டில்ல் ஆன்மீக சுதந்திரம், மத சுதந்திரம், வழிபாட்டு சுதந்திரம் இல்லை. ஆகையால், இந்துக்கள் யாரும் திமுக அரசுக்கு வாக்களிக்கக் கூடாது" எனப் பேசியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து சாடி வரும் எச்.ராஜா மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோயில் நகரம் காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு இடைஞ்சலாக இந்து சமய அறநிலையத் துறையே செயல்பட்டு வருகிறது. தமிழக அரசை பொறுத்தவரை, டாஸ்மாக் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இவை இரண்டு தான் தங்கச் சுரங்கம். இங்குதான் கொள்ளையடிக்க முடிகிறது. 'ரதசப்தமி' அன்று ஏகாம்பரநாதர் கோயிலில் சங்கர மடம் சார்பில் அளிக்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான தங்கத்தேர் வீதி உலா வருவதில், காவல்துறைக்கும் அறநிலையத்துறைக்கும் என்ன ஆட்சேபனை? அதை ஏன் தடுக்க வேண்டும்?
இதுவே மாற்று மதத்தினர் நம்பிக்கை மற்றும் மத வழிபாடுகளுக்கு காவல்துறை தடை விதிக்கிறதா? அப்படி செய்ய திமுக அரசுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? முதலமைச்சர் வருகையால், ரதசப்தமி தங்கத்தேர் வீதி உலாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது கண்டனத்திற்குரியது. ஒருவேளை தேர் ஊர்வலத்திற்கு அனுமதியளிக்கவில்லை என்றால் சாபம்தான் கிடைக்கும். 2026 தேர்தலில் திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என இந்துக்கள் முடிவெடுக்க வேண்டும். சனாதனத்திற்கு எதிராக பேசிய தீய திமுக அரசு ஒழிய வேண்டும்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்துக்களின் மத நம்பிக்கைகளை சிதைக்கும் செயல் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்து விரோத தீய சக்திகள் கூடிக் கொள்ளை அடிக்கிறார்கள். பிற மாநிலங்களில் உள்ள இந்து கோயில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் பற்றி அறிந்திருந்தும், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்துக் கிடப்பதில் என்ன தவறு? என்று அமைச்சர் சேகர்பாபு சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? அறநிலையத்துறை அறம் கெட்ட துறையாக மாறிப்போனதற்கு இதுவே உதாரணம்.
எனவேதான், இந்த அறம் கெட்ட துறையை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என நான் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறேன். பிற மத வழிபாட்டு தலங்களில் எந்த கட்டணமும் இல்லாதபோது, இந்து கோயில்களில் மட்டும் கட்டணம் எதற்கு? இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் மக்களிடமிருந்து பணத்தை சுரண்டுகிறார்கள். இந்துக்களுக்கு தமிழகத்தில் ஆன்மீகம் மற்றும் மத சுதந்திரம், வழிபாட்டு சுதந்திரம் உள்ளிட்டவை இல்லை. ஆகையால், இந்துக்கள் யாரும் திமுக அரசுக்கு வாக்களிக்கக் கூடாது" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications