நாத்திகத்தையும் பாதுகாக்கிறது அரசியல் சட்டம் -ஹைகோர்ட்டில் உதயநிதி பரபர வாதம் -உதவிய 'குஷ்பூ கேஸ்'!
சென்னை: மத நம்பிக்கையைப் போல நாத்திக கொள்கையையும் பாதுகாக்கிறது அரசியல் சாசனம் என சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி மற்றும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்ட முக்கிய அம்சங்கள்: அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் சாசன உறுதிமொழியை மீறிவிட்டதாக கூறி உயர்நீதிமன்றம் ஒருபோதும் நடவடிக்கையை எடுக்க முடியாது. ஏனெனில் அமைச்சர் ஒருவரை நியமிப்பது, நீக்குவது என்பது முதலமைச்சரின் தனி அதிகாரத்துக்கு உரியது.
நாத்திக உரிமை: என்னதான் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளையே பேசி இருந்தாலும் கூட தனி நபர்கள் யாருமே வழக்கு தொடரவே முடியாது என்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவு என்பது மத நம்பிக்கையை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் நாத்திக கொள்கைகளையும்தான் பாதுகாக்கிறது. நாத்திக கோட்பாடுகளை ஒருவர் பின்பற்றுவது ஏன் என்பது குறித்து விளக்கம் தர, கருத்து தர அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவு உரிமை வழங்குகிறது. இதனடிப்படையில்தான் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கே தொடர முடியாது. பெரும்பான்மை நம்பிக்கையை பாதுகாக்கும் சமயத்தில் மாற்று கருத்தாளர்களின் கருத்து உரிமையையும் பாதுகாக்க வேண்டும். அத்தகைய உரிமையை பாதுகாக்க வேண்டியது உயர்நீதிமன்றத்தின் கடமையும் கூட.
நடிகை குஷ்பூ வழக்கு: பொதுமக்களிடையே சனாதனத்தால் ஏற்றத்தாழ்வு- தீண்டாமை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷாயி வழங்கிய தீர்ப்பு. திருமணத்துக்கு முன்பு உடலுறவு குறித்து நடிகை குஷ்பூ அப்போது தெரிவித்த கருத்துகளுக்காக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகை குஷ்பூவின் கருத்துகள் பிடிக்கவில்லை என்றால் அவரது கருத்து தவறு என்று விவாதிக்கலாமே தவிர அதற்காக வழக்குகளை ஏன் தொடர வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தது.
பெருமாள் முருகன் வழக்கு: பெருமாள் முருகன், மாதொருபாகன் என்ற புத்தகம் எழுதியது தொடர்பாக வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கிலும் கூட ஒருவரது கருத்துரிமையப் பாதுகாக்க வேண்டும்; அவரது கருத்து பிடிக்கவில்லை எனில் அந்த புத்தகத்தை வாங்காமல் விட்டுவிடுங்கள்; அதற்காக கருத்துரிமையை தடுத்துவிட முடியாது என்பதும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

அந்த 8 காரணங்கள்: அரசியல் சாசனமானது ஒருவரது பேச்சுரிமை அடிப்படை உரிமை என்கிறது. அத்தகைய பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தவும் 8 காரணங்களை அரசியல் சாசனம் முன்வைக்கிறது. ஆனால் அரசியல் சாசனம் சுட்டிக்காட்டி இருக்கும் 8 காரணங்களில் ஒன்றை கூட மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டவில்லை. இது சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். அத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பையும் மனுத் தாக்கல் செய்ய வைத்திருக்கின்றனர்.
டிஸ்மிஸ் செய்யுங்க: சனாதன ஒழிப்பு மாநாடு என்பது ஒரு கூட்டரங்களில் ஒருநாள் முழுவதுமாக காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இந்தக் கூட்டரங்கில் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்று உரையாற்றினர். அண்ணல் அம்பேத்கர் பேசிய கருத்துகளையே உதயநிதி ஸ்டாலினும் சுட்டிக்காட்டி பேசினார். உங்களுக்கு அத்தகைய கருத்துகள் பிடிக்கவில்லை எனில் ஏன் வழக்கு போட வேண்டும்? உங்களுக்கு பிடிக்காத கருத்தை கேட்காமல் இருந்துவிடுங்கள். ஆகையால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இந்த வழக்கை நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். இவ்வழக்கு விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications