இன்று முதல் கோயம்பேடு இல்லை.. கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்.. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படாது என்றும், கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் 30-ந் தேதி (இன்று) முதல் இயக்கப்பட மாட்டாது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் 30-ந் தேதி (இன்று) முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்து உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும்.

அதாவது, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் அதிகப்படியான பேருந்துகளும், அதன்பிறகு பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப பேருந்துகளும் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் பின்வரும் வழித்தடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை வருமாறு:
சென்னையில் இருந்து திருச்சிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 118 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 18 பேருந்துகளும், சேலத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 66 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 17 பேருந்துகளும், விருத்தாசலத்திற்கு 30 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 6 பேருந்துகளும், கள்ளக்குறிச்சிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 50 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 16 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதே போன்று, விழுப்புரத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 59 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 16 பேருந்துகளும், கும்பகோணத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 52 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 14 பேருந்துகளும், சிதம்பரத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 21 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 5 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நெய்வேலிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 46 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 11 பேருந்துகளும், திண்டிவனம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 32 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 5 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேலும், திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 35 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 10 பேருந்துகளும், செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 125 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 22 பேருந்துகளும், போளூருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 30 பேருந்துகளும், வந்தவாசிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 46 பேருந்துகளும், போளூர் மற்றும் வந்தவாசிக்கு மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மொத்தத்தில் 710 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், 160 பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன (இந்த 870 பேருந்துகளும் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது." இவ்வாறு கூறியுள்ளார்.
மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாகத்தான் செல்லும் . வடசென்னை பகுதி மக்களின் வசதிக்காகவே விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 160 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகள் மற்றும் சேலம், கும்பக்கோணம் கோட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இன்று முதல் இயக்கப்படுகின்றன.
அதேநேரம் இ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் பூந்தமல்லி வழியாக வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தருமபுரி, திருத்தணி, செய்யாறு உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications