இனிமேல் ரு.20 பத்திரம் செல்லாது.. முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு.. பதிவுத்துறைக்கு தினகரன் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் என 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை பல மடங்குகள் உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
பொதுவாக, வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் ஆகியவற்றை பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்க வேண்டும்... இப்படி முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசு கருவூலத்துக்குத் தேவையான வரியும் கிடைக்கும்

குறிப்பிட்ட சில இனங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் கடந்த 2001ம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 என இருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது ரூ.100, 200, 500 ஆகவும், உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முத்திரைத்தாள்: இனிமேல் 20 ரூபாய்க்கு பத்திரம் வாங்க முடியாது என்பதால், அந்த பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.. இதேபோலவே பல்வேறு இனங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரமாண பத்திரம்: இந்த தகவலை குறிப்பிட்டு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில், "தத்தெடுப்பது, பிரமாணப் பத்திரம், உடன் படிக்கை, சங்கம் பதிவுக்கான கட்டணம் என பெரும்பாலான முத்திரைத் தாள் கட்டணத்தை கடந்த ஆண்டு பல மடங்காக திமுக அரசு உயர்த்தியது. தற்போது சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத் தாள் கட்டணத்தையும் திமுக அரசு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் பத்திரப்பதிவு கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, வீடு வரைபட அனுமதிக் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும் திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. இதனால் ஏழை,எளிய மக்களின் சொந்த வீடு எனும் கனவு முற்றிலுமாக தகர்ந்துள்ளது.
டிடிவி தினகரன்: பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இனி வரும் காலங்களில் மக்களின் மீது சுமையை ஏற்றாமல் பத்திரப் பதிவுத்துறையின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications