உச்சநீதிமன்றத்திற்கு கேள்வி.. குடியரசுத் தலைவருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை! - சந்துரு
சென்னை: தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
கடந்த ஏப்.8ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. ஆளுநர்களின் அதிகார வரம்பு, சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான ஆளுநர்/குடியரசுத் தலைவருக்கான கால நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்பு மாநில அரசால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாஜகவினர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில்தான் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை உச்சநீதிமன்றத்திற்கு எழுப்பியிருந்தார். ஏப்.8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கில் வாதங்களின்போது மத்திய அரசு தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர்கள் என்ன வாதங்களை, கேள்விகளை முன் வைத்திருந்தார்களோ, அதையேத்தான் குடியரசுத் தலைவர் முன்வைத்திருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான அதிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மீதான விளக்கமாகத்தான் இந்த தீர்ப்பை பார்ப்பதாக, தீர்ப்பை வரவேற்பவர்கள் கூறியிருக்கிறார்கள். அதே நேரம், அரசியல் சாசனத்தில் ஆளுநர்கள்/குடியரசுத் தலைவருக்கு, ஒரு மசோதாவின் மீது முடிவெடுக்கும் கால வரம்பை ஏற்கெனவே குறிப்பிடாமல் இருந்திருக்கிறது எனில், இனி அதனை குறிப்பிடவே கூடாது என்று அர்த்தம் கிடையாது. அந்த வகையில் தீர்ப்பை வரவேற்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் குடியரசுத் தலைவரின் கேள்விக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில், இந்த கேள்விகளுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டியதில்லை என்று முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
"தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் கேட்டிருக்கும் கேள்விகளை போல கடந்த காலங்களிலும் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 143வது பிரிவின் பிரிவு 1-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற குடியரசுத் தலைவர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அதே பிரிவில் உச்ச நீதிமன்றமும் தனது கருத்தை குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதும் இருக்கிறது. எனவே நீதிமன்றம் பதிலளிக்க தேவையில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications