ஸ்டாலின் இருக்கும் வரை திமுகவை அசைக்க கூட முடியாது.. விஜய்க்கு அமைச்சர் சேகர் பாபு ரியாக்ஷன்
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய விஜய், திமுக தான் நம் எதிரி என்று நேரடியாக கூறினார். இந்த நிலையில் விஜய்யின் பேச்சுக்கு திமுகவினர் பதில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக அமைச்சர் சேகர்பாபு, மு க ஸ்டாலின் இருக்கும் வரை திமுகவை அசைக்க கூட முடியாது என்று பதில் தெரிவித்துள்ளார். திமுக என்பது ஓடி கலைகின்ற மேகக் கூட்டங்கள் கிடையாது என்றும் அவர் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. விக்கிரவாண்டி வி சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாநாடு மேடைக்கு 4 மணிக்கு வந்த விஜய், அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்து உற்சாகம் அடைந்தார். தொண்டர்களுக்கு விஜய் கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

பின்னர் 800 மீட்டர் நீளமுள்ள 'ரேம்ப்’பில் விஜய் நடந்து சென்று இருபுறமும் உள்ள தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதையடுத்து தனது முதல் அரசியல் மாநாட்டில் விஜய் உரையாற்றினார். 45 நிமிடங்கள் பேசிய விஜய், தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுக தான் நம் எதிரி என்றும் விஜய் கூறினார்.
இதனால் விஜய்யின் பேச்சுக்கு தற்போது திமுக பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது. விஜய் பாஜகவின் சி டீம் போல செயல்படுவதாக அமைச்சர் ரகுபதி சாடினார். அதேபோல, உதயசூரியனை நட்சத்திரங்கள் எதுவும் செய்ய முடியாது என்று தமிழச்சி தங்க பாண்டியன் கூறியுள்ளார். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் சமூக வலைத்தளங்களில் விஜய்யின் விமர்சனத்திற்கு பதில் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
மற்றொரு பாஜக தலைவர்களும் விஜய்யின் பேச்சுக்கு பதில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் விஜய்யின் திராவிட மாடல் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சேகர் பாபு கூறியதாவது:- திமுக என்பதுஓடி கலைகின்ற மேகக் கூட்டங்கள் கிடையாது.
கொள்கை சார்ந்த கூட்டம் திமுக. எப்படிப்பட்ட புயல், மழை, வெள்ளம் வந்தாலும் அனைத்தினையும் எதிர்கொண்டு கடல் அலை முரணாக இருக்கும் போது கூட நேர்த்தியாக கரைக்கு செலுத்தும் மாலுமியாக எங்கள் தலைவர் முதல்வர் இருக்கும் வரை எந்த சக்தியாலும் திமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது" என்றார்.
முன்னதாக விக்கிரவாண்டி மாநில மாநாட்டில் பேசிய விஜய் பாஜக மற்றும் திமுகவை நேரடியாக அட்டாக் செய்தார். சீமான் உள்ளிட்ட பிற கட்சிகளை மறைமுகமாக விமர்சித்தாலும் கூட ஆளும் கட்சிகளான பாஜக மற்றும் திமுகவை நேரடியாக அட்டாக் செய்தார். விஜய் பேசுகையில், "சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன், மக்களை பிரித்து ஆளும் பிளவு வாத அரசியல் மட்டும் தான் நமக்கு எதிரியா, அப்படியென்றால் நமக்கு ஒரு எதிரி தானா, இல்லையே, நமக்கு இன்னொரு கோட்பாடும் இருக்கிறது.
ஊழல் மலிந்த கலாசாரத்தை எதிர்ப்பது தானே அது. ஊழல் கலந்து போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 100 சதவீதம் பரவி கிடக்கிறது. இதை முழுவதுமாக ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்வோம். ஊழல்வாதிகள், கலாசாரம் என பல்வேறு வேடம் அணிந்து கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள். முகமூடி போட்ட ஊழல்வாதிகள் இருந்து கொண்டு, இப்போது நம்மை ஆண்டு கொண்டும் இருக்கிறார்கள்.
உண்மை தான். ஒரு எதிரி பிளவுவாத சக்திகள், இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள். எதிரிகள் யார் என்று சொல்லி விட்டால் போதுமா, இதுதான் அரசியல் என்றால் இல்லை. மக்களுக்கு நன்மை செய்வதே மகத்தான அரசியல். மக்களோடு மக்களாக, அவர்களுடன் ஒருவனாக நிற்பதே எங்களின் நிரந்தர அரசியல் என்று விஜய் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications