“காங்கிரஸ் கட்சியில் இருந்து தவெக உடன் யாருமே பேசல”.. செய்தியாளரிடம் சீறிய செல்வப்பெருந்தகை!
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து தவெக உடன் யாரும் பேசவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தியா கூட்டணி கொள்கைக் கூட்டணி.. இதை யாராலும் சிதைத்துவிட முடியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி கணக்குள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதுவரை திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது. தொடர்ந்து, அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி பிற கட்சிகளை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் இன்னும் கூட்டணி கணக்கை தொடங்கவில்லை. காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உடன் மறைவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியினர் தவெகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஜனநாயகன் படம் விஷயத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியே குரல் கொடுத்தார். இதனால், தவெக காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்ற கேள்விகள் எழுந்தது.
இதற்கிடையில், டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக உடன் தான் கூட்டணி என்றும், தவெக காங்கிரஸ் கூட்டணி என்றெல்லாம் பத்திரிகை, ஊடகங்களில் பேச வேண்டாம் என கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும், காங்கிரஸ் - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை என அவ்வப்போது சலசலப்புகள் எழுந்து வருகின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நாங்கள் யாரும் பேசவில்லையே.. தவெக உடன் யார் பேசினார்கள்? யாராவது பேசி இருக்கிறோமோ? நான் பேசினேனா? அகில இந்திய தலைமை பேசி இருக்கிறதா?
இதுபற்றி ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறோம். கிரிஷ் சோடங்கர் ஏற்கனவே தெரிவித்து உள்ளார். ஒருபோதும் பேசவும் இல்லை. பேசியதும் இல்லை. நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தான் பேசி இருக்கிறோம் என்று கூறி உள்ளார். திரும்ப திரும்ப அதையே சொன்னால் என்ன பண்ண முடியும்? பேசாததை சில பேருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகப் பேசிவிட்டேன், பேசிவிட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்." எனக் காட்டமாக கூறினார்.
மேலும் பேசிய அவர், "அகில இந்திய தலைமை வலிமையான முடிவு எடுக்கும். சரியான முடிவு எடுக்கும். தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ.. காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எது நல்லதோ, அந்த முடிவை எடுக்கும். மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் எனச் சொல்வது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை. இந்த போஸ்டர் ஒட்டுவது இதெல்லாம் அநாகரிகத்தின் உச்சம்." என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, "2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழக காங்கிரஸில் 3,328 விருப்ப மனுக்கள் இதுவரை பெறப்பட்டிருக்கின்றன. இன்னும் சில விருப்ப மனுக்கள் மாவட்டங்களில் இருக்கின்றன. அதெல்லாம் இன்னும் ஓரிரு நாட்களில் வரும். ஏறக்குறைய 6,000 விருப்ப மனுக்கள் நெருங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்வதைப் போல திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இழுபறியும் இல்லை. இது இயற்கை கூட்டணி, கொள்கைக் கூட்டணி. இந்தக் கூட்டணியை எல்லாம் அவ்வளவு ஈஸியாக சிதைத்துப் பிரித்து, யாரோ ஒருவர் ஆட்சி அமைப்பதற்கு, யாரோ ஒரு கட்சி தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாக காணுகின்ற கனவை நனவாக்குவதற்கு அவர்கள் இடம் பெறுவதற்கு இவ்வளவு பெரிய முயற்சிகளைச் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது, இந்தியா கூட்டணி வலிமை பெறும்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில், ஏற்கனவே திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்ட குழு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, சுமூகமாக முடியும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications