எதிர்தரப்பில் ஆளே இல்லை.. ஸ்டாலினை எதிர்க்க போகும் "அந்த" தலைவர்.. "எக்ஸ்பர்ட்" சொன்ன முக்கிய தகவல்
பாஜகவை தமிழ்நாடு மக்கள் பெரிதாக விரும்பவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கும் சரியான தலைவர் எதிர் தரப்பில் இல்லை என்பதே இப்போது நிஜம் என்று மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. இரண்டு ஆண்டு ஆட்சிக்கு மதிப்பெண் கொடுக்கும் விதமாக தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலுக்கு இடையில் அதிமுக உட்கட்சி மோதலும் ஒரு வகையில் முடிவிற்கு வந்துள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழு வழக்கிலும் அவர் வென்றுவிட்டார். ஆனால் ஸ்டாலினை எதிர்க்கும் அளவிற்கு இன்னும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வலுவான தலைவர் உருவாகவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா
இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா இரண்டாம் அலை சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சிக்கு வந்த போது கொரோனாவை கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது. முக்கியமாக 4000 ரூபாய் எல்லோருக்கும் கொடுத்ததில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் வேக்சின் கொடுத்தது முக்கியமான அளவில் பாராட்டடப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் மிக சிறப்பான திட்டமாக இருந்தது. காலை சிற்றுண்டி திட்டம் மிகவும் பாராட்டுக்குரிய திட்டம். இதெல்லாம் இந்த அரசுக்கு கீழ் நடந்த மிகப்பெரிய மாற்றங்கள்.

ஸ்டாலின்
முக்கியமாக காலை உணவு திட்டம், இலவச பேருந்து பயண திட்டம் இரண்டுமே மிக முக்கியமான திட்டம். அதேபோல் பொருளாதார ஆலோசனை குழு அமைத்தது. அவர்களின் ஆலோசனையின் கீழ் செயல்பட்டது எல்லாம் சிறப்பானது. இல்லம் தேடி கல்வி திட்டம் எல்லாம் அவர்கள் கொடுத்த மாதிரியின் அடிப்படையில் உருவான திட்டம்தான். இதெல்லாம் மாணவர்கள் கல்வியில் இருந்து கொரோனா காலத்தில் நிற்காமல் இருக்க முக்கிய வழியை ஏற்படுத்திக்கொடுத்தது. அரசு கருத்துக்களுக்கு இடம் அளிக்கிறது. பலரின் கருத்துக்களுக்கு செவி கொடுக்கிறது.

மாநில உரிமைகள்
அதேபோல் மாநில உரிமைகள் பற்றி குரல் கொடுத்து வருகிறார்கள். கொள்கை ரீதியாக அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அவர் ஆட்சிக்கு வரும்போதே இது நீதிக்கட்சியின் நீட்சி என்றார். அதன்படியே ஆட்சி நடத்தி வருகிறார்கள். திராவிட மாடல் என்ற பதத்தை உருவாக்கி உள்ளனர். இதுவும் நல்ல கவனம் பெற்றுள்ளது. மாநில சுயாட்சி தத்துவம் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டு உள்ளது. ஸ்டாலினை எதிர்க்கும் சரியான தலைவர் எதிர் தரப்பில் இல்லை என்பதே இப்போது நிஜம். எடப்பாடி பழனிசாமி இப்போதுதான் வழக்கில் வென்றுள்ளார்.

பெரிய தலைவர்?
அவர் இன்னும் தன்னை பெரிய தலைவராக நிரூபிக்கில்லை. அவர் சோதனை காலத்தில் இருக்கிறார். அவர் ஒரு டெஸ்டிங் தலைவர். அவர் இனி தேர்தல்களில் வெல்ல வேண்டும். மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். எடப்பாடி இன்னும் தேர்தல் வெற்றியை பெறவில்லை. அந்த வெற்றியை எடப்பாடி பெற வேண்டும். கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் தேர்தல்களில் வென்றார். ஆனால் எடப்பாடி இதுவரை எந்த தேர்தல்களிலும் வெல்லவில்லை. அதோடு ஸ்டாலின் கொள்கை ரீதியாக கூட்டணி வைத்துள்ளார். அவர்களின் கூட்டணியில் பெரிய பிளவு இல்லை. இன்னொரு பக்கம் பாஜகவிற்கு இங்கு பெரிய ஆதரவு இல்லை.

பாஜக
பாஜகவை தமிழ்நாடு மக்கள் பெரிதாக விரும்பவில்லை. பாஜக இந்திய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடு அளவில் பாஜகவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு மக்கள் அரசியல் ரீதியாக நல்ல அறிவு கொண்டவர்கள். அதனால் தமிழர்களை எளிதாக ஏமாற்றி விட முடியாது. அது அதிமுகவிற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்போதைக்கு ஸ்டாலினை எதிர்க்கும் வலுவான தலைவர் இல்லை. ஸ்டாலின் தனக்கு எதிரான சோதனைகளை வென்று, அதில் வென்றும் இருக்கிறார். எதிர் தரப்பில் இன்னும் யாரும் அப்படி நிரூபிக்கவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications