அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை..முடிவெடுத்த முதல்வர்..பயிற்சி பாசறையை வலுப்படுத்த தயாரான உதயநிதி
அமைச்சராக இப்போதைக்கு பதவியேற்கப்போவதில்லை என்பதால் அடுத்த படத்திற்கு கதை கேட்க ஆரம்பித்திருக்கிறாராம் உதயநிதி.
சென்னை: உதயநிதிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று பல அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் கோரிக்கை வைத்தும் அதை இப்போதைக்கு அமல்படுத்த தயாராக இல்லையாம் முதல்வர் மு.க ஸ்டாலின். இதனால் திராவிட மாடல் பயிற்சி பாசறையை வலுப்படுத்த தயாராகி விட்டராம். அடுத்த படத்தில் நடிப்பதற்கான கதையை கேட்கவும் ரெடியாகி விட்டாராம் உதயநிதி ஸ்டாலின்.
சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதுமே உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை பட்டியல் வெளியானபோது, அதில் உதயநிதியின் பெயர் இடம்பெறவில்லை. இது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றமாக அமைந்தது. எம்எல்ஏவாக வெற்றி பெற்றாலும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். திமுக நிகழ்ச்சிகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டு அடுத்த தலைமுறை வாக்காளர்களை கவர்ந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
தற்போது அமைச்சராக உள்ள பலரும் செய்தியாளர்களிடம் பேசும் போதோ, விழாக்களில் பங்கேற்று பேசும் போதோ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் அல்லது துணை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு போன்றவர்கள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற தங்களின் விருப்பங்களை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

திமுகவில் தீர்மானம்
உதயநிதியை அமைச்சராக வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வரிசையாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

உதயநிதி அறிக்கை
தனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பின்னரும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம், உதயநிதி ஸ்டாலின் எப்போது அமைச்சராவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் எந்த பதிலையும் கூறாமல் லேசாக சிரித்து விட்டு சென்றார்.

மீண்டும் நடிப்பேன்
சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்பட விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலினிடம் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு நீங்கள் தொடர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி சமூகப் பொறுப்புள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன். அது போன்ற படங்கள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். என்னுடைய தாத்தா சினிமா அரசியல் என இரண்டு துறையிலும் பயணித்தார். அதுபோல் நானும் பயணிப்பேன் பயணித்து வருகிறேன் என கூறினார்.

குடும்ப அரசியல் வேண்டாமே
உதயநிதி அப்படி பேசியதற்கு காரணம் இல்லாமல் இல்லை..தனக்கு தற்போதைக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்பது தெரிந்துதான் அடுத்த படத்திற்கு கதை கேட்க தயாராகி விட்டாராம் உதயநிதி. முதல்வர் மு.க ஸ்டாலினிடம் பேசிய நலம் விரும்பிகள் சிலர் 2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு உதயநிதியை அமைச்சராக்கலாம் என்று ஆலோசனை கூறியதாக தெரிகிறது அதனையடுத்தே உதயநிதியின் கவனம் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளது என்கின்றனர்.

திராவிட மாடல் பயிற்சி பாசறை
அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கட்சியை வலுப்படுத்தும் பணியிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறையை வலுப்படுத்தும் பணியிலும் களமிறங்கியிருக்கிறார் உதயநிதி.
சில தினங்களுக்கு முன்பு திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு திராவிட மாடல் பயிற்சி நடைபெறும் என்று கூறியுள்ளார். லோக்சபா தேர்தலுக்காக இப்போதிருந்தே தயாராகி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் தாமோ அன்பரசன் சொன்னது போல உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இன்னும் 20 மாதங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.












Click it and Unblock the Notifications