வெறும் பேப்பர்.. ஆளுநர் வெளியிட்ட அறிவிப்புக்கு பவரே கிடையாது.. வரிந்துகட்டி வந்த மூத்த வழக்கறிஞர்!
சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ள நிலையில், ஆளுநர் வெளியிட்டுள்ள பேப்பருக்கு பவரே கிடையாது என திமுக மூத்த வழக்கறிஞரும், எம்.பியுமான வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.
எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. சட்டரீதியாக நாங்கள் இதை சந்திப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், "ஆளுநர் ஆர்.என்.ரவியின் உத்தரவு வெற்றுக்காகிதம் மட்டுமே. ஆளுநருக்கு அமைச்சரவையில் இருந்து அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என திமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
"அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு பத்திரிகைச் செய்தி மட்டும் தான். இந்த காகிதத்திற்கு பவர் கிடையாது" என திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications