"சின்ன மழைக்கே இடுப்பளவு தண்ணீர் நிற்கும்.. ஆனா இந்த வருஷம் இல்லை.. " வடசென்னை மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இருப்பினும் வடசென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையின் போது தண்ணீர் வேகமாக வடிந்தது. கிட்டத்தட்ட 300 மி.மீ. கனமழை பெய்தபோது, மாநகராட்சியின் சிறப்பான நடவடிக்கைகளால் மழை பெய்த சுவடே இல்லாமல் நீர் வேகமாக வெளியேற்றப்பட்டது.
இதற்போது தமிழ்நாட்டின் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்றிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. ஆனால் இது வெறும் தொடக்கம்தான் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு கனமழையின் வீரியம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு காரணம் என்ன?
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடியவிடிய மழை
சென்னையில் இரவு முதலே கனமழை தொடங்கினாலும், அதிகாலை 4 மணியளவில் தீவிரமடைந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கேகே நகர், அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையிலும் கும்மிருட்டுடன் கனமழை பெய்தது.

வடசென்னையில் கனமழை
இதேபோல் வடசென்னை பகுதிகளான பட்டாளம், புளியங்தோப்பு, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியது. ஆனால் மழை குறைந்த சில மணி நேரத்தில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சிறிய மழைக்கே தாங்காத ஜீவா சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மகிழ்ச்சி
இதுகுறித்து வடசென்னை பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில், வடசென்னை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறிய மழைக்கே இடுப்பளவு தண்ணீர் நிரம்பிவிடும். ஆனால் நட்ப்பாண்டில் அப்படியில்லை. மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது. இவ்வளவு கனமழையிலும் தண்ணீர் தேங்காதது மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் நிற்காத நிலையிலும் அனைவரும் பணிக்கு சென்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications