மகளிர் உரிமை தொகை போல்.. மாற்றுத்திறனாளிகளின் மனம் குளிருமா.. முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை
சென்னை : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்பது தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் துறையாகும். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பலர் மாத உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்துள்ளார்கள்.. அப்படி விண்ணப்பித்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாகிளுக்கு இதுவரை உதவி தொகை கிடைக்கவில்லை என்றும் , முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் பலருக்கு உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை எழுந்தள்ளது.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இதுதவிர லட்சக்கணக்கானோருக்கு முதியோர் உதவித்தொகையும், விதவையர் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை மற்றும் விதவையர் உதவித் தொகை ஆக மாதம் 1200 ரூபாய் வழங்கப்படுகிறது..

இந்த உதவித்தொகை முன்பு ஆயிரம் ரூபாய் என்ற அளவில் தான் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முதல் தான் 1200 ரூபாய் ஆக வழங்கப்படுகிறது.. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் பல்வேறு சமூக நல உதவித்திட்டங்கள் மூலம் சுமார் 30.24 லட்சம் பேர் உதவி தொகை பெறுகிறார்கள் என்பது சென்ற ஆண்டு புள்ளி விவரம் ஆகும்.
இதில் முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கு மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்து 35 ஆயிரத்து 906 மாற்றுத்திறனாளிகள் பயன் அடைந்து வருகிறார்கள். இதுதவிர வருவாய்த்துறை மூலம் கண் பார்வையற்றோர் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஓய்வூதியத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை பெற புதிதாக விண்ணப்பித்த பலர், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகா உதவி தொகை கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். ஏனெனில் இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தமிழக அரசு நிர்ணயித்துள்ள மாற்றுத்திறன் பாதிப்பு தன்மையை அரசு டாக்டர்கள் பரிசோதித்து அறிக்கையாக தருவார்கள். 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் விண்ணப்பித்தால் மட்டுமே பரிசீலனைக்காக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து உதவித்தொகைக்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தி வரும் அரசு, புதிதாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களை கனிவுடன் பரிசீலித்து ஏற்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications