கோவை மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை.. "ஆனால்.." ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கோவை மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும் தேர்தல் முடிவுகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பணப்பட்டுவாடா செய்தது குறித்து விசாரணை நடத்த தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரியும், அது வாக்கு எண்ணிக்கையை கோவையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோவை மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது பாகுபாடில்லாமல் அனைத்து கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை கொடுத்ததாகவும், தேர்தல் ஆணையத்தில் பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. அதே வேளையில் கோவை மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும் தேர்தல் முடிவுகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என இடைக்கால உத்தரவு பிறபித்து வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications