தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார்
சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை புகார் மனு கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மதுராந்தகம் கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து விட்டது என்றும் இது தொடர்பாக சிறப்பு குழுவை அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் உரிமை ஆணையத்தில் இன்பதுரை மனு கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் சமீப காலமாக அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தாலும் கூட சில நேரங்களில் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக உள்ளதாக அரசியல் கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமசித்து வருகின்றன.

தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை
தூத்துக்குடி மாவட்டத்தில் +2 படித்து வந்த மாணவி ஒருவர் காலைக்கடன் கழிப்பதற்காக தன் வீட்டில் அருகில் இருந்த முட் புதர்களுக்கு போனதாக சொல்லப்படுகிறது. அப்போது மர்ம நபர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல, செங்கல்பட்டு மதுராந்தகத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் தமிழகத்தை உலுக்கியது. அடுத்துடுத்து ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக எம்பி இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மகளிர் உரிமை ஆணையத்திற்கு கடிதம்
இது தொடர்பாக தேசிய மகளிர் உரிமை ஆணையத்திற்கு இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்பதுரை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. குறிப்பாக குழந்தைகளைகூட பாதுகாக்க மாநிலம் தவறிவிட்டது என்பதை உங்கள் உடனடி கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
தூத்துக்குடியில் 11.03.2026 அன்று பிளஸ்-2 மாணவி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது ஒரு சாதாரண வன்முறைச் சம்பவம் அல்ல; மாநில நிர்வாகத்தின் தோல்வியால் ஏற்பட்ட குற்றமாகும். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கூறி, பாதுகாப்பு வழங்குமாறு போலீசிடம் முறையாக மனு அளித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக நடவடிக்கை எடுங்க
ஆனால் அவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையான பாதுகாப்பை வழங்க தவறியதால், சம்பந்தப்பட்ட உள்ளூர் போலீஸ் துறை இந்த கொலைக்கு மவுனமாக உடந்தையாக இருந்தது போலத் தோன்றுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையை செய்ய தவறியது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி, அவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்யவும் அஜாக்கிரதையாக செயல்பட்டதற்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல, தமிழகத்தில் சமீபத்தில் பெண்களுகுக் எதிரான குற்றசெயல்களை பட்டியலிட்டும் இந்த கடிதத்தை இன்பதுரை எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications