வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் சூழலில், வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

Tamil Nadu Assembly Election 2026 Nomination Filing election commission

கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் கக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரத்திற்கான திட்டங்களை தீட்டத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் 8 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுபோல் தோன்றினாலும், நடைமுறையில் அதில் 4 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக இருப்பதால் அந்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேட்பாளர்கள் கவனமாக நாட்களை தேர்வு செய்து மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதன்படி, மார்ச் 31ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி என்பதால் அந்த நாளில் மனு தாக்கல் செய்ய முடியாது. அதேபோல் ஏப்ரல் 1ஆம் தேதி வங்கிகளின் முழு வருட கணக்கு முடிவு தினமாக இருப்பதால் அந்த நாளும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறை மற்றும் ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த நாளிலும் மனு தாக்கல் அனுமதிக்கப்படாது.

இதனால் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடிய நாட்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்று தொடங்கி ஏப்ரல் 2, ஏப்ரல் 4 மற்றும் இறுதிநாளான ஏப்ரல் 6 ஆகிய நாட்களில் மட்டுமே வேட்பாளர்கள் நேரடியாக மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசி நாட்களில் வேட்பாளர்கள் அதிக அளவில் திரளும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் தங்களது தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரடியாக மனு தாக்கல் செய்யலாம். அதேசமயம் இணையதளம் மூலமாகவும் மனு தாக்கல் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உருவாக்கிய 'சுவிதா' என்ற இணையதளத்தின் வாயிலாக வேட்பாளர்கள் தங்களது மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி," பொது விடுமுறை நாட்களிலும், மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள், அரசால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்கள் என்பதால், எந்தவொரு வேட்புமனுவையும் தேர்தல் நடத்தும் அதிகாரி பெறக்கூடாது. மற்ற சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தால், அன்றும் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாது. உள்ளூர் விடுமுறை எதுவும் பொது விடுமுறை ஆகாது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சி வேட்பாளராக இருந்தால் அவரை அவர் போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் முன்மொழிய வேண்டும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர் அல்லது சுயேட்சை வேட்பாளர் என்றால் அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் அவரை முன்மொழிய வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கலின் போது 360 கோணத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு இருக்கும். சி.சி.டி.வி.இல்லாத நிலையில் வீடியோ பதிவு செய்யப்படும்.

பிற்பகல் 3 மணிக்கு பிறகு யாரும் அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது. தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியின் கையொப்பமிட்ட சீட்டு, அறைக்குள் இருக்கும் வேட்பாளருக்கு வழங்கப்படும்.

மத்திய அரசு அல்லது மாநில அரசுப் பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர், நீக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பினால், முதலில் அவர் தேர்தல் கமிஷனை அணுக வேண்டும். ஊழல் அல்லது அரச துரோக குற்றங்களுக்காக பணிநீக்கம் செய்யப்படவில்லை என்பதற்கான சான்றிதழை பெற வேண்டும். அந்த சான்றிதழுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்றால், அவர் வாக்காளராக இருக்கும் பட்டியலின் நகலை கொடுக்க வேண்டும். வேட்புமனு தாக்கலுக்காக நேரில் வரும் வேட்பாளருடன் 3 கார்கள் வரலாம். தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அந்த வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

2 தொகுதிகளுக்கு மேல் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. 2-க்கும் மேலாக தாக்கல் செய்யப்படும் அனைத்து வேட்புமனுக்களுக்கும் நிராகரிக்கப்படும். டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வேட்பாளர்கள் அதில் பாதி தொகையை செலுத்தினால் போதும். வேட்புமனு தாக்கல் செய்யும்போது அளிக்கப்படும் உறுதிமொழியை வாசிக்க வேண்டும்.

https://suvidha.eci.gov.in என்ற இணையதளம் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கான 'விண்டோஸ்' 30-ந்தேதி காலை 11 மணிக்குதான் திறக்கும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, நேரில் வந்து வேட்புமனுவை சமர்ப்பிக்கும் நாளையும் அதில் குறிப்பிட வேண்டும்.

நெட் பேங்கிங் மூலம் டெபாசிட் பணத்தை செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட வேட்பாளர்தான் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதை நிரூபிப்பதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு அந்த வேட்பாளர் அல்லது அவரை முன்மொழிந்தவர் நேரில் வந்து, 'கியூஆர் கோட்' உடனான ஆன்லைன் விண்ணப்பத்தின் நகலை கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+