Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடகிழக்கு பருவமழை..சில வாரங்களில் ஜோராக தொடங்கும்..சமாளிக்க தயாராகும் அரசு..என்னென்ன ஏற்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட கிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 35 முதல் 75 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், அதை சமாளிக்க வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பெய்யும் தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிப்பது வழக்கம். இந்த பருவமழை காலத்தில் தான், தமிழகத்துக்கு வேண்டிய மழை நீர் கிடைக்கும். இந்த பருவத்தில் கிடைக்கும் மழை நீர் மூலம் தான் தமிழகத்தில் வட மாவட்டங்களில் விவசாயம், குடிநீர் தேவை உள்ளிட்டவை பூர்த்தியாகும்.

தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை

கடந்த காலங்களில் இந்த தென் மேற்கு பருவமழை காலத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய அளவான 118.6 மிமீட்டருக்கு பதிலாக, கூடுதலாக மழை பெய்ததுண்டு. ஆனால் 2022ம் ஆண்டில், செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய 118.6 மிமீக்கு பதிலாக, 85.6 மிமீ மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவமழையை பொருத்தவரையில், செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளில் அது அக்டோபர் இரண்டாவது வாரம் வரை நீடிப்பதுண்டு. இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி தொடங்கிய தென் மேற்கு பருவமழை செப்டம்பர் இறுதியில் படிப்படியாக குறையத் தொடங்கியது.

விடைபெறும் பருவமழை

விடைபெறும் பருவமழை

குறிப்பாக குஜராத், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபர் 6ம் தேதி வரை பெய்தது. மும்பை, போபால், பாட்னா, லக்னோ ஆகிய பகுதிகளில் அக்டோபர் 5ம் தேதி வரையும் நீடித்த தென்மேற்கு பருவமழை கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா பகுதிகளில் அக்டோபர் 15ம் தேதி வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையடுத்து, தென் மேற்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியுடன் விடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 பருவமழை கூடுதல்

பருவமழை கூடுதல்

தென் மேற்கு பருவமழையின் இறுதி காலமான செப்டம்பர் 29ம் தேதியில் இருந்து அக்டோபர் 15ம் தேதி வரையிலான காலத்தில், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் இயல்பைவிட கூடுதலாக 60 சதவீதம் மழை பெய்துள்ளது. அதேபோல, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, பீகார் சத்தீஷ்கர், ராயலசீமா, வட கர்நாடகா, ஆகிய பகுதிகளில் இயல்பைவிட 20 சதவீதம் முதல் 59 சதவீதம் வரை கூடுதலாக மழை பெய்துள்ளது. அந்தமான் நிகோபார், அசாம், மேகாலயா, சிக்கிம், கிழக்கு மத்திய பிரதேசம், தெலங்கானா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் இயல்பைவிட கூடுதலாக 19 சதவீதம் மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

கடந்த 5 ஆண்டுகளில் பெய்த மழையை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022ம் ஆண்டில் இயல்பாக பெய்ய வேண்டிய 868.6 மிமீ மழைக்கு பதிலாக 925.0 மிமீ மழை பெய்துள்ளது. இது கூடுதலாக 6 சதவீதமாகும். இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, அக்டோபர் 15ம் தேதி வரை தென் பகுதியான கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் வரை வீசும் தென் மேற்கு பருவக் காற்று வீசுவது நின்றுவிடும் என்பதால், தென்மேற்கு பருவமழை பெய்வது அத்துடன் முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்து தமிழகத்தில் வட கிழக்கு பருவக் காற்று வீசத் தொடங்கும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பருவமழையில் இயல்பைவிட 35 முதல் 75 சதவீதம் கூடுதலாக பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக அரசு பருவமழை சேதங்களை சமாளிக்கவும், பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மழை நீர் தேங்கும் பகுதிகளில் உள்ள அடைப்புகளை அகற்றுவது, மழை நீர் வெளியேற வேண்டிய வகையில் புதிய கால்வாய்களை கட்டுவது, பழைய கால்வாய்களை சீரமைப்பது போன்ற பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை

வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை


மேலும், மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. பள்ளிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த பணிகள் 90 சதவீதம் அளவில் தமிழகம் முழுவதும் முடிந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதனால் இந்த வட கிழக்கு பருவமழையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

பேரிடரை எதிர்கொள்ள தயார்

பேரிடரை எதிர்கொள்ள தயார்

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள பல்வேறு துறைகள், முப்படை, பிரிவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் தலைமைச்செயலர் 13.09.2022 அன்று ஆய்வு மேற்கொண்டு, பேரிடர்களின் தாக்கத்தை குறைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.

 கட்டணமில்லா தொலைபேசி சேவை

கட்டணமில்லா தொலைபேசி சேவை

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருவதோடு, பொதுமக்கள் 1070 கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலம் பொது மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

வாட்ஸ் அப் எண்

வாட்ஸ் அப் எண்

மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. 94458 69848 வாட்ஸ் அப் எண் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. TNSMART செயலி மூலம் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. பொதுவான எச்சரிக்கை நடைமுறை வாயிலாக செல்பேசிகள் மூலம் பொது மக்களுக்கு புயல், கனமழை வெள்ள அபாய எச்சரிக்கை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள்

கடலோர மாவட்டங்கள்

1,51,050 முதல் நிலை மீட்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் தாக்கத்திற்கு உள்ளாகும் 16 மாவட்டங்களில், ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வர்களுக்கு தேடல், மீட்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் பேரிடர்களை சந்திக்க முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளனர்.

 90 ஹெலிகாப்டர்கள்

90 ஹெலிகாப்டர்கள்

மாநிலத்தில் மீட்புப் பணிகளுக்காக 90 ஹெலிக்காப்டர் இறங்குதளங்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் காலங்களில் கடலோர மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்காக 1 லட்சத்து 13 ஆயிரம் நபர்களை தங்க வைக்கக்கூடிய 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் 4,973 பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட கண்டறியப்பட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கை

மீட்பு நடவடிக்கை

மீட்பு நடவடிக்கைகளுக்காக, 2,897 JCB இயந்திரங்களும், 2,115 ஜெனரேட்டர்களும், 483 நீர் இறைப்பான்களும், 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 5,900 கட்டுமரங்களும், 48,100 மோட்டார் படகுகளும் மற்றும் 5,800 இயந்திர படகுகளும் தயார் நிலையில் உள்ளன. வெள்ளத் தடுப்புக்கென போதுமான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மின்கம்பங்கள், மின்கடத்தி மற்றும் மின்மாற்றிகள் தயார் நிலையில் உள்ளன.

மீனவர்களுக்கு சேட்டிலைட் போன்

மீனவர்களுக்கு சேட்டிலைட் போன்

மீனவர்களுக்கு, Satellite Phone, Navtex, Navic மூலம் பேரிடர் குறித்த தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பாலங்கள், சிறுபாலங்களில் தூர் வாரவும் அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரத்தை பொறுத்தமட்டில், தற்போது நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை 15.10.2022-க்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளின் முன்னேற்றத்தை அனைத்து மண்டல கண்காணிப்பாளர்களும் (Zonal Monitoring Officers) பிரத்யேகமாக அக்கறையுடன் கண்காணித்து வருகிறார்கள்.

தயார் நிலையில் மருத்துவமனை

தயார் நிலையில் மருத்துவமனை

மழைக்காலத்தில், பொது மக்களுக்கு தங்கு தடையின்றி பால் மற்றும் பால் பவுடர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிடங்குகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைமை மருத்துமனைகளும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், போதுமான மருத்துவர்கள், செவிலயர்கள் மற்றும் மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன. இந்த வகையில், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+