இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!
சென்னை: தமிழகத்திலும் கேரளாவிலும் தென்மேற்குப் பருவமழை அடுத்த 3 நாட்களுக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக உள்மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், தற்போது பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்மேற்குப் பருவமழை அரபிக்கடல், வங்கக்கடல் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளில் படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்த சாதகமான வானிலை சூழல் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இந்த வளிமண்டல மாற்றம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை செயல்பாடு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்படி இன்று (ஜூன் 1) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த மாவட்டங்களில் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகள் மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல் ஜூன் 6-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மழை வாய்ப்பு இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் உடனடியாக குறையாது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட சுமார் 5 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்பம் தொடரக்கூடும் என்பதால் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடலோர பகுதிகளுக்கும் வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை, தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு முக்கியமான மழைப்பொழிவை வழங்குகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு இந்த மழை பெரும் ஆதாரமாக இருந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் முதல் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications