எம்ஜிஆர் பெயரை சொல்லும் எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது - விஜயை விளாசிய எடப்பாடி
சென்னை: சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் எம்ஜிஆர் நடித்து வெளியான ‛இதயக்கனி' திரைப்படத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்த்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ‛‛எம்ஜிஆர் பெயரை சொல்லும் எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது'' என்று தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்து வெளியான இதயக்கனி திரைப்படம் ரிரீலிஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 200 நாட்களை தாண்டி தியேட்டரில் ஓடி வருகிறது. இன்று ‛இதயக்கனி' திரைப்படம் 225வது நாளில் ஓடுகிறது.

படம் பார்த்த எடப்பாடி
இதையடுத்து தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் இன்று இதயக்கனி திரைப்படத்தை பார்த்தார். முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஆர்பி உதயக்குமார், உள்பட பலரும் எடப்பாடி பழனிச்சாமியுடன் ‛இதயக்கனி' திரைப்படத்தை பார்த்தனர்.
விஜய் மீது ‛அட்டாக்’
அதன்பிறகு நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போதுஎம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி வரும் விஜயை மறைமுகமாக தாக்கி பேசினார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ‛‛1975ம் ஆண்டில் வெளியான எம்ஜிஆரின் இதயக்கனி ரிரீலிஸ்செய்யப்பட்டுள்ளது. 225வது அதிகமான நாட்கள் ஓடுகிறது. அந்த அளவுக்கு எம்ஜிஆர் மரணடைந்த பிறகும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எம்ஜிஆர் பெயரை சொல்லாமல் சினிமா, அரசியலில் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் அந்த அளக்கு மக்கள் சக்தி படைத்த தலைவர் எம்ஜிஆர். அதேவேளையில் எம்ஜிஆர் பெயரை சொல்பவர்கள் எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது'' என்றார்.
பின்னணி என்ன?
தவெக தலைவர் விஜய் அதிமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவிடம் சரணடைந்து விட்டதாக கூறி வருகிறார். எம்ஜிஆர் எப்படி திரைத்துறையில் இருந்து புதிய கட்சியை தொடங்கி முதல்வரானோரோ அதேபோல் விஜய் முதல்வராவார் என்று தவெக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
அதேவேளையில் அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை விஜய் புகழ்ந்து பேசி வருகிறார். அதிமுகவின் வாக்கு வங்கியை ஈர்க்கும் வகையில் விஜய் செயல்பட்டு வரும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து விஜயை தாக்கி பேசி வருகின்றனர். அந்த வகையில் விஜயை எடப்பாடி பழனிச்சாமி அட்டாக் செய்துள்ளார்.
படத்தின் பெயர் காரணம்
மேலும் இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‛‛ மதுரையில் பாராட்டு விழா நடந்தது. இதில் அண்ணா பங்கேற்று பேசினார். மரத்தில் ஒரு கனி பழுத்து தொங்கி கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ என்று பார்த்து கொண்டிருந்தேன்.
நல்ல வேளையாக அந்த கனி என் மடியில் வந்து விழுந்துவிட்டது. அந்த கனியை எடுத்து பத்திரமாக இதயத்தில் வைத்து கொள்கிறேன் என்றார். எம்ஜிஆர் தான் அண்ணாவின் இதயக்கனி. இதனை எல்லா இடத்திலும் சொல்லி பெருமைப்பட்டவர் எம்ஜிஆர். இதனால் தான் அண்ணாவின் நினைவாக இதயக்கனி என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டது’’ என்று பேசினார்.












Click it and Unblock the Notifications