அந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா.. கதையே மாறிடும்.. தேமுதிக முடிவிற்கு பின் இப்படி ஒரு காரணமா? நிஜமாவா?
சென்னை: அதிமுக தேமுதிக கூட்டணி முறிவிற்கு பின் வேறு ஒரு முக்கியமான காரணம் இருக்கலாம்.. இதற்கு பின் பல முக்கியமான சம்பவங்கள் நடந்துள்ளன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் அதிமுகவின் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறிவிட்டது. இனியும் கூட்டணியில் எங்களால் நீடிக்க முடியாது, எங்களுக்கு சுயமரியாதை முக்கியம் என்று கூறி தேமுதிக இந்த முடிவை எடுத்துவிட்டது.
தேமுதிக 25+ தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டை கேட்ட நிலையில் அதிமுக 13 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்தது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக மொத்தமாக வெளியேறி உள்ளது.

தகவல்
இந்த நிலையில் அதிமுக தேமுதிக கூட்டணி முறிவிற்கு பின் வேறு ஒரு முக்கியமான காரணம் இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன. பொதுவாக பெரிய கட்சியின் கூட்டணியில் சிறிய கட்சிகள் வளர்ந்து வரும் கட்சிகள் போட்டி போடும் போது, அந்த பெரிய கட்சிகள் நிதி கொடுக்கும். தேர்தல் செலவுகளை செய்வதற்காக திமுக , அதிமுக என்று எல்லா கட்சிகளும் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இப்படி நிதி கொடுக்கும்.

உதவி
அந்த வகையில் தேர்தல் செலவுகளை தேமுதிகவிற்காக செய்ய அதிமுக முன் வந்துள்ளது. தேமுதிகவின் வேட்பாளர்கள் நிற்கும் இடங்களில் எல்லாம் தேர்தல் செலவுகளை நேரடியாக செய்ய அதிமுக முன்வந்துள்ளது. ஆனால் தேமுதிகவோ.. நாங்களே செலவு செய்கிறோம், எங்களிடம் பணத்தை கொடுத்துவிடுங்கள் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழப்பம்
இதை ஏற்பதில் உருவான குழப்பம்தான் கூட்டணி உடைந்ததற்கு காரணம் என்கிறார்கள்.கூட்டணி கட்சிகளின் தேர்தல் செலவை கவனிப்பது என்பது சாதாரண விஷயம்தான். அதிக பணம் பலம் கொண்ட கட்சிகள் கூட்டணியின் வெற்றிக்காக இப்படி செய்வதில் தவறு இல்லை. ஆனால் நிதியை நேரடியாக அதிமுகவ செலவு செய்யுமா, தேமுதிகவிடம் கொடுத்து செலவு செய்ய சொல்லுமா என்பதுதான் பிரச்னைக்கு காரணம் ஆகியுள்ளது.

தேமுதிக
அதிமுக செலவு செய்ய ரெடியாக இருந்தது.. ஆனால் நாங்களே செலவை நேரடியாக களத்தில் செய்கிறோம் என்ற முடிவில் இருந்தது. நாம் செலவு செய்தால்தான் வெற்றியை உறுதி செய்ய முடியும், செலவையும் கண்காணிக்க முடியும்,தேமுதிகவிடம் பணத்தை கொடுக்க முடியாது என்ற மனநிலையில் அதிமுக இருந்துள்ளது. எந்த காரணம் கொண்டும் வெற்றியை பறிகொடுத்தவிட கூடாது என்பதில் அதிமுக உறுதியாக இருந்தது.

முறிவு
ஆனால் தேமுதிகவோ அதிமுகவிடம் பணம் வாங்கி செலவை மேற்பார்வையிட முடிவு செய்துள்ளது. நேரடியாக அதிமுக செலவு செய்வதை தேமுதிக விரும்பவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் மொத்தமாக கூட்டணி முறிவிற்கும் காரணமாக அமைந்தது என்கிறார்கள். அதே சமயம் இது தொடர்பாக பேசிய தேமுதிக நிர்வாகிகள் வேறு விஷயங்களை தெரிவிக்கிறார்கள்.

நிர்வாகிகள் கருத்து
பணம் எல்லாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை..எங்களுக்கு உரிய மரியாதையை அதிமுக கொடுக்கவில்லை . எங்களின் வாக்கு வங்கிக்கான மரியாதையை அவர்கள் கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தையில் அவர்கள் எங்களை நடத்திய விதம் வெளியே தெரிந்தால் கதையே வேறு.. இடப்பங்கீடுதான் கூட்டணி உடைய காரணம். வேறு காரணம் எதுவும் இல்லை. இது தொடர்பாக தவறான கருத்துக்கள் வெளியாகி வருகிறது என்று தேமுதிக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications