சிப்காட்டாக மாறும் 3174 ஏக்கர் விவசாய நிலம்! விவசாயிகள் மீது குண்டாஸ்? போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை
சென்னை: விவசாய நிலங்களுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் குண்டர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து நாளை திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் 'சிப்காட் 3-வது அலகு விரிவாக்கம்' செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.

அரசை பொறுத்தவரையில் இந்த நிலம் தரிசு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு நெல், மணிலா, கரும்பு, கேழ்வரகு, பூக்கள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அரசி திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்துதான் வருகிறது.
அரசு சொல்வதை போல இது தரிசு நிலம் கிடையாது என்றும், இது வேளாண் நிலம் என்று கூறி திருவண்ணாமலை மக்கள் 'மேல்மா சிப்காட்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக 72 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும் விவசாயிகள் 125 நாட்கள் கடந்தும் தற்போது வரை போராட்டத்தை நடத்தி வந்திருந்தனர்.
இப்படி இருக்கையில் 126வது நாளாக கடந்த நவம்பர் 4ம் தேதியன்று இவர்கள் பேரணி நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் என 7 பேர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் மேலெழுந்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து நாளை திருவண்ணாமலையில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில்,
"திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய தினம் (18/11/2023) பாஜக சார்பாக, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications