ஆளுநரை டிஸ்மிஸ் செய்வது குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.. திமுக எம்.பி டி.ஆர்.பாலு
சென்னை: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்வது குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் விடுமுறை நாட்களை தவிர்த்து மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன.

பெங்களூரில் கடந்த இரு தினங்களாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு போட்டியாக பாஜகவும் நேற்று டெல்லியில் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டத்தை கூட்டியது. அரசியல் களம் கொதிக்க தொடங்கியுள்ள இந்த சூழலில் நாளை நாடாளுமன்றம் கூடுகிறது. மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி சிவா அவர்களும் நானும் அந்தந்த குழு தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தமிழக ஆளுநரை திரும்ப பெறுவதற்கு அல்லது டிஸ்மிஸ் செய்வதற்காக....
எதனால் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ஏன் திரும்ப பெற வேண்டும் என்று பேசுவதற்காக ... ஏனென்றால் அரசியல் சட்டத்திற்கு புறம்பாகவும் அரசியல் சட்டத்திற்கு கட்டுப்படாமலும் சிதைக்கிற வகையிலும் நடந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று அரசாங்கத்திற்கு வேண்டுகோள் வைக்கும் விதமாக அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும் என்று இருவருமே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
அவையின் தலைவர்கள் அனுமதிப்பார்களா இல்லையா என்பது நாளை காலைதான் தெரியும். இருந்தாலும் மிக மிக வேகமாக இந்த பிரச்சினையை எடுத்து செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேபோல விஷம் போல ஏறிக்கொண்டு இருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த பிரதமரோ அமைச்சர்களோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் இந்த நாடு மோசமான நிலைக்கு பொருளாதார சீர்கேடுக்கு தள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றி பேச வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறோம்.
நாட்டிலே படித்த இளைஞர்கள் கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள். ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாங்கி தருவேன் என்று 9 ஆண்டுகளுக்கு சொல்லி இன்றைக்கு 10 வது ஆண்டு போய்க்கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறோம். இவ்வாறு டி ஆர் பாலு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications