ஒழுக்கம், உழைக்காமல் சொகுசு வாழ்க்கை, வளர விடனும். தலைமை பண்பு.. யாரை விளாசினார் நாதக காளியம்மாள்?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் திருவையாறு பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. தனி மனித ஒழுக்கம், உழைக்காமல் சொகுசாக வாழ்வது, ஒருவரை வளரவிடாமல் தடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காளியம்மாள் பேசியது யாரைக் குறிப்பிட்டு? என்பதும் சமூக வலைதளங்களில் விவாதமாகிக் கொண்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சில ஆடியோக்கள் வெளியாகி இருந்தன. இதனை சுட்டிக்காட்டி சீமானும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் திருவையாறு நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் காளியம்மாள் தனி மனித ஒழுக்கம் தொடர்பாகவும் கட்சி முரண்கள் தொடர்பாகவும் பகிரங்கமாக பேசியிருப்பது பெரும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.
தனிமனித ஒழுக்கம்: திருவையாறு பொதுக் கூட்டத்தில் காளியம்மாள் பேசியதாவது: பிரபாகரனிடம் இருந்து ஒரு மனிதன் முதலில் தனி மனித ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். நமக்குள் முரண்கள் இருக்கின்றன. இதனால் நமக்கான கூட்டம் குறைவாக இருக்கிறது. இதை நாம் ஆரம்பகாலம் தொட்டு சொல்கிறேன்.
வளர்ந்துவிடுவானோ?: நோக்கங்கள் ஒன்று; இலக்கு ஒன்று; சிந்தனை ஒன்று; செயல் ஒன்று.. ஆனால் முரண் எங்கிருந்து வருகிறது? எங்கே இவன் நம்மைவிட வளர்ந்துவிடுவானோ? அவன் நம்மை விட வளர்ந்துவிடுவானோ? என்பதால்தான்.
ஒன்று, வளர்வதற்கான சாத்தியக் கூறு என்னிடம் இருக்க வேண்டும். இல்லை என்றால் வளருகிறவனை உயர்த்துகிற மனநிலையாவது என்னிடம் இருக்க வேண்டும். ஒரு பாதையை உருவாக்குகிற வேலைதான் என்னுடையது. அதற்காக அந்த பாதையே என்னுடையதும் அல்ல.
நிரந்தரமாக பற்றுவது இல்லை: எதனையுமே நிரந்தரமாக பற்றிக் கொள்கிற உரிமை மனிதனுக்கு கிடையாது; அதனால்தான் மனிதன் நிலையற்றவன்.எதன் மீதும் நீங்கள் ஆசைப்பட்டுவிட முடியாது. நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பை விட்டுவிட்டாய்.. பெரிய செல்வந்தராகி இருக்கும் வாய்ப்பை விட்டுவிட்டாய்..உன் பிள்ளைய பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்திருக்கக் கூடிய வாய்ப்பை விட்டுவிட்டாய்.. வீடு கட்டி வசதியாக வாழ்ந்திருக்கலாம் அந்த வாய்ப்பை விட்டுவிட்டாய்.. நெருக்கடியாக, வறுமையில் வாழ வேண்டிய அவசியம் ஏன்? என எல்லோரும் கேட்கிறார்கள். எனக்கும் என் பிள்ளைக்கும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. இந்த மண்ணில் பண்புடன் வாழ்வதற்கான கல்வியை நான் கொடுத்துவிடுவேன்.. அவ்வளவுதான்..
உழைக்காமல் சொகுசு வாழ்க்கை: என் பிள்ளையை சும்மா சொகுசாக வாழவிட்டு, உண்மையிலேயே உழைப்பு என்றால் என்ன என்று தெரியாமல் அந்த பணம் எங்கிருந்து வருகிறது.. அதன் வலி என்ன என்று தெரியாமல் பகட்டு வளர்ப்பாக வளர்க்க நான் விரும்பவில்லை. என் அப்பா எனக்கு பீஸ் கட்ட முடியாமல் இருந்தவர் அல்ல.. இளம் பிராயத்தில் ஆசைப்பட்டது எல்லாம் வாங்கினேன். என் தந்தையின் உழைப்பை நேரில் பார்த்த பின்னர்தான் உழைத்து படித்தேன்.
பெண்கள் மீது நம்பிக்கை இல்லை: பெண்களை இந்த சமூகம் நம்பவே இல்லை; பெண்கள் ஆகச்சிறந்தவர்கள்; அரசியல் படைப்பாளர்கள் என்ற நம்பிக்கை இப்போது வரைக்கும் குறைவுதான்.
சங்கடமும் வீட்டை விட்டு போவதும்: மனவருத்தங்கள், சங்கடங்கள் இருக்கிறதா? எனில் இருக்கத்தான் செய்யும். சங்கடங்கள் வந்துவிட்டதாலேயே எல்லோரும் வீட்டை விட்டு கிளம்பிப் போனால் என்ன அர்த்தம்? அவ்வளவுதான். சில பிரச்சனைகளை பேசி சரி செய்யலாம். சில பிரச்சனைகளை புரிந்து கொள்ளும்படியான நடத்தைகள் மூலம் சரி செய்யலாம். சில பிரச்சனைகளுக்கு தீர்வே காண முடியவில்லை எனில் அப்போது பார்க்கலாம். ஒவ்வொரு தனிநபரும் யானை பலம் கொண்டவர்கள் என்கிற உணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும்.
அதிகாரம், காசு பணத்துக்காக இல்லை: நமக்கான அரசியல் நெருக்கடிகள் கூடுதலாகிவிட்டன. அப்படியான நிலையில் நாம என்னவாக இருக்க வேண்டும்? சில இடங்களில் சின்ன சின்ன பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்கிவிடுகின்றனர். யாரும் இந்த பிரச்சனைகளை முடிக்க வேண்டும் என்ற எல்லைக்கே போவதும் இல்லை. இவனை தூக்கியாக வேண்டும் என டார்கெட் வைக்கின்றனர். இந்த இலக்குக்காக நிற்பவர்கள் அதிகாரம், காசு பணத்துக்காக வரவில்லை.
வளருங்கள்.. வளர விடுங்கள்: ஒரு தலைமைத்துவ பண்பாளனாக நாம் திகழ வேண்டும் எனில் ஒன்று நீங்கள் வளருங்கள்.. இல்லை என்றால் உங்களை நம்பி இருப்பவர்களை வளரவிடுங்கள்; வளர்த்துவிடுங்க.. நீங்க செய்ய வேண்டிய கடமையையும் சேர்த்து அவர்கள் முடிப்பார்கள். இவ்வாறு காளியம்மாள் பேசினார்.












Click it and Unblock the Notifications