கைது செய்யமாட்டோம்.. ரெய்டுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டில் சொன்ன NIA
சென்னை: நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்போம், கைது நடவடிக்கை ஏதும் இருக்காது என சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்றது. திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் ஒருவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றறது.
அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகரும், யூடியூபருமான விஷ்ணு பிரதாப் வீட்டிலும், கோவையில் ரஞ்சித் குமார், காளப்பட்டி முருகன் ஆகியோர் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், என்.ஐ.ஏ சோதனையிடுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை தலைவர் சேவியர் பெலிக்ஸ், மாநில செயலாளர் சங்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு முறையீடு செய்தனர்.
என்.ஐ.ஏ சோதனை சட்டவிதி மீறல் என குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் உடனடியாக சோதனை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. என்.ஐ.ஏ சோதனை தொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்தார்.
துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது, தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்தது. சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது.
இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியை முடக்கும் வகையிலும், கட்சியினருக்கும், அனுதாபிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அனைவரும் தயாராக இருப்பதாகவும், அதற்கு உரிய கால அவகாசத்தை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்குக்கும் ஊறு விளைவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினர் எந்த தேசவிரோத, சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதால், தேசிய புலனாய்வு முகமை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரியுள்ளார்.
வழக்கு விசாரணை: இந்த வழக்கு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சங்கர், சேவியர் பிலிக்ஸ் ஆகியோர் ஆஜரானார்கள்.
கட்சி நிர்வாகிகளுக்கு காலையில் சம்மன் அளித்துவிட்டு உடனடியாக அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். வெளியூரில் உள்ள நிர்வாகிகளுக்கும் காலையில் சம்மன் அனுப்பி சென்னையில் இன்றே ஆஜராக வேண்டும் என்று கூறுகிறார்கள். இது சட்ட விதி மீறல் என்றும் தெரிவித்தனர். சில இடங்களில் சோதனையும் நடத்தினார்கள் எனவே அந்த சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
கைது செய்யமாட்டோம்: என்ஐஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், மனுதாரர் திங்கள்கிழமை 5ஆம் தேதி ஆஜராக அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதை ஏற்றுக்கொள்கிறோம், அவர் 5 ஆம் தேதி ஆஜராகலாம் என்று தெரிவித்துள்ளோம். கைது நடவடிக்கை ஏதும் இருக்காது, சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications