தொட்டாலே உதிரும் கட்டிடம்.. அதிமுக அரசின் மோசடித்தனம்.. திமுக அரசின் அலட்சியம்.. சீமான் கடும் தாக்கு
சென்னை: சென்னை குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் நிலை ஆளும் அரசுகளின் நிர்வாகச்சீர்கேட்டினை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கட்டிடத்தின் சுவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளது. உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன என்று பல்வேறு செய்தி சேனல்களில் வீடியோக்கள் வெளியாகின.

மிக மோசமான கட்டிடம்
இது மட்டுமின்றி கட்டடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து மோசமான நிலையில் இருப்பது பற்றி செய்தி வெளியானது. இந்த கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கட்டிடத்தின் அவல நிலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்திருந்தார் 2016-ல் அதிமுக ஆட்சியில் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 864 வீடுகள் இருக்கின்றன.

அமைச்சர் நேரில் ஆய்வு
குடியிருப்பு கட்டிடத்தின் தரத்தை சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு குழுவினரின் ஆய்வறிக்கையை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குடியிருப்பு கட்டிடத்தை குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கவன ஈர்ப்பு தீர்மானம்
'இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரரோ, அதிகாரிகளோ யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சிதிலமடைந்ததை சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். இதற்கிடையே குடிசை மாற்று வாரியம் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பு முறைகேடு தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. . எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

சீமான் கருத்து
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை மாநகரப் பூர்வக்குடிகளுக்கு மாற்றுக்குடியிருப்பாக புளியந்தோப்புப்பகுதியில் வழங்கப்பட்ட கே.பி.பார்க் அடுக்ககத்தின் கட்டுமானம் மிகமோசமான நிலையிலிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அக்கட்டிடம் மிகப்பலவீனமாக இருப்பதும், கான்கிரீட் காரைகள் தொட்டாலே உதிர்ந்து விழுவதுமான காட்சிகள் ஆளும் அரசுகளின் நிர்வாகச்சீர்கேட்டினை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.

அதிமுக அரசு மோசடி
ஒரு வீட்டிற்கு 15 இலட்சம் வீதமென செலவினத்தை மதிப்பிட்டுவிட்டு, தரமற்ற வீட்டைக்கட்டி முறைகேடு செய்திட்ட முந்தைய அதிமுக அரசின் மோசடித்தனத்தையும், கட்டிடத்தின் தரத்தைக்கூட பரிசோதிக்காமல் மக்களை அவசரகதியில் குடியேற்றிய திமுக அரசின் அலட்சியப்போக்கையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்பு என்று அழைத்துச்சென்று, அதுவும் இல்லாமல் செய்துவிடாதீர்கள் பெருமக்களே! 2016 ஆம் ஆண்டு நடந்த முகலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும், அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளும் நமக்கு பெரும் படிப்பினையாக இருக்கிறது. மீண்டும் அதுபோல ஒரு கோரவிபத்து நிகழ்ந்துவிடக்கூடாது.

நடவடிக்கை வேண்டும்
ஆகவே, உடனடியாக மக்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும், அடுக்ககத்தைத் தரமற்றதாகக் கட்டி மக்கள் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும், முந்தைய ஆட்சியாளர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications