நொடிப்பொழுதில் மாறிய நம்பர் பிளேட்.. ஐதராபாத்தை தலைசுற்ற வைத்த டாக்டரின் கிளவர் பிளான்! நடந்தது என்ன
சென்னை: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின் போது, ஒரு டாக்டர் தன்னுடைய சொகுசு காரின் நம்பர் பிளேட்டை நொடிப் பொழுதில் மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் படமான ஜேம்ஸ் பாண்டில் வரும் தொழில்நுட்பத்தை நிஜ வாழ்க்கையில் குற்றச் செயலுக்காகப் பயன்படுத்திய அந்த டாக்டர் இப்போது போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டிருக்கிறார்.. என்ன நடந்தது?
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கவுதம் ரெட்டி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு, தன்னுடைய பி.எம்.டபிள்யூ (BMW) சொகுசு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

இரவு நேரம் என்பதால், ஐதராபாத்தின் முக்கியப் பகுதியான ஜூப்ளி ஹில்ஸ் அருகே போலீசார் வழக்கமான தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதையில் கார் ஓட்டி வந்த டாக்டர் கவுதமை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
பிறகு அவரிடம் மது பரிசோதனையும் நடத்தப்பட்டது.. அப்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தண்ணி அடித்திருந்தது உறுதி செய்யப்பட்டது... இதனால் போலீசார் அவரிடம் காரின் ஆவணங்களை கேட்டனர்.. இந்த விசாரணை நடத்திக் கொண்டிருந்த போதே, அந்த வினோதமான சம்பவம் அரங்கேறியது.
நொடியில் மாறிய நம்பர் பிளேட்
அதாவது போலீசார் காரின் முன்புறம் நின்றுக் கொண்டிருந்தனர்.. அப்போது திடீரென அந்த காரின் நம்பர் பிளேட் தானாகவே சுழன்றது.. அதுவரை டெல்லி மாநில பதிவெண் கொண்ட DL 6CM 7097 என்ற நம்பர் மறைந்து, அடுத்த நொடியே தெலுங்கானா மாநிலப் பதிவெண் கொண்ட TS 9FQ 9999 என்ற எண் அங்கே தோன்றியது.
அத்தனை கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும்போது, அதுவும் போலீசாரின் முன்னிலையிலேயே, கண்ணிமைக்கும் நேரத்தில், இப்படியொரு மேஜிக் நடந்துவிட்டது.. இதை பார்த்து அங்கிருந்த அத்தனை அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். பிறகுதான் தெரிந்தது, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல, போலீசாரிடம் இருந்தும் கண்காணிப்பு கேமராக்களிடம் இருந்தும் தப்பிக்க காரினுள் ஒரு ரகசிய ரிமோட் சுவிட்ச் பொருத்தி வைத்திருக்கிறாராம் டாக்டர்..
பிளான் போட்டது எப்படி?
இந்த ரிமோட்டை வைத்துதான் காருக்குள்ளிருந்தே டக்கென நம்பரை மாத்தியிருக்கிறார்.. இதை கண்டுபிடித்த போலீசார், டாக்டரிடம் விசாரணை மேற்கொண்டனர்..
அப்போதுதான் டாக்டர் கவுதம் ரெட்டி இந்த மோசடியை திட்டமிட்டு செய்தது தெரியவந்தது. டெல்லியில் வாங்கப்பட்ட இந்தக் காருக்கு, தெலுங்கானாவில் முறைப்படி சாலை வரி செலுத்தாமல் இருக்கவும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும்போது அபராதத்தில் இருந்து தப்பிக்கவும் அவர் இந்த வழியைத் தேர்ந்து எடுத்துள்ளார்.
குறிப்பாக, டி.எஸ். 9 எப்.க்யூ. 9999 என்ற அந்த போலி நம்பர் பிளேட், அவரது வீட்டில் இருக்கும் இன்னொரு காஸ்ட்லி காரின் எண்ணாகும். ஒரே மாடல் கார்களுக்கு ஒரே எண்ணை பயன்படுத்தினால் கேமராக்களில் சிக்கினாலும் போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று டாக்டர் கணக்கு போட்டாராம்.. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரிமோட் கருவியை ஆன்லைனில் வாங்கி, மாதப்பூரில் உள்ள ஒரு கார் அலங்காரக் கடையில் ரகசியமாகப் பொருத்தியுள்ளார்.
காவல்துறை நடவடிக்கை
டாக்டர் கவுதம் ரெட்டி மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் (Drunk and Drive), மோட்டார் வாகன சட்டத்தை மீறுதல், ஆள்மாறாட்டம் மற்றும் போலீசாரை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது பி.எம்.டபிள்யூ கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அறிவை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டிய ஒரு மருத்துவர், சட்ட விரோதச் செயல்களுக்காகப் பயன்படுத்தியது ஐதராபாத் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அந்தக் காரில் உபகரணங்களைப் பொருத்த உதவிய நபர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்...!!












Click it and Unblock the Notifications