ஓபிஎஸ் மத்திய அமைச்சராக நினைச்சாரு.. “பதவிக்காக” ‘மனசாட்சிய தொட்டு சொல்லுங்க’.. சீறிய கோகுல இந்திரா!
தனது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க இருந்ததை எடப்பாடி பழனிசாமி சதி செய்து தடுத்து நிறுத்தியதாக ஓபிஎஸ் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தானே எம்.பியாகி மத
சென்னை: தனது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க இருந்ததை எடப்பாடி பழனிசாமி சதி செய்து தடுத்து நிறுத்தியதாக ஓபிஎஸ் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தானே எம்.பியாகி மத்திய அமைச்சராக வேண்டும் என்று நினைத்தார் ஓபிஎஸ் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
எம்.பி சீட்டை தனக்கு வேண்டும் என்று கேட்டார் ஓபிஎஸ். எம்.பியாகி, மத்திய அமைச்சராகலாம் எனக் கணக்கு போட்டார் ஓபிஎஸ். எப்போதுமே பதவியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஓபிஎஸ் என சரமாரியாக சாடியுள்ளார் கோகுல இந்திரா.
கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்தால், மனம் வெதும்பி டெல்லியை நோக்கி ஓபிஎஸ் கண் வைத்தார் என சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல்கள் வெளியான நிலையில், அதனை தற்போது குறிப்பிட்டுள்ளார் கோகுல இந்திரா.

அமைச்சர் பதவி கிடைக்காமல்
நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சதி செய்ததாகவும், தனது மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கவிடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமி என்ன மணி அடித்தாலும், அவர்கள் பப்பு வேகாது என்றும், தைரியம் இருந்தால், தனிக்கட்சியை நடத்தி பார். வீவீதியில் வந்து நான் தனிக்கட்சி தொடங்க போகிறேன் என்று சொல்லிப்பார். எங்கே போய் விழுவாய் என்று உனக்கே தெரியாது என்றும் கடுமையாகச் சாடினார்.

திட்டமிட்டு சதி
மேலும் பேசிய ஓபிஎஸ், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, இடைத்தேர்தலில் தோல்வி, நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அனைத்துக்கும் எடப்பாடி பழனிசாமிதான் காரணம். ஒரே ஒரு தொகுதியில் தேனியில் வெற்றி பெற்றோம். அப்போது பாஜக தொலைக்காட்சியில் ரவீந்திரநாத் மத்திய அரசு பட்டியலில் இருக்கிறார் என்று செய்தி வெளியானது. என்ன வினைக்குப் போட்டார்கள் என தெரியவில்லை. உடனடியாக எடப்பாடி பழனிசாமி 9 அமைச்சர்களுடன் டெல்லி வந்து எதுவும் இல்லாமல் செய்துவிட்டார். திட்டமிட்டு சதி செய்து தடுத்து நிறுத்திவிட்டார்கள். ஆனால் எதாவது நான் எதிர்வினை ஆற்றினேனா, இல்லை எனத் தெரிவித்தார்.

கட்சியில் குழப்பம் ஏற்படும்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ஓபிஎஸ் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிதான், ராஜ்யசபாவில் பல சீனியர்கள் இருக்கும்போது ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் கட்சியில் குழப்பம் ஏற்படும் என பாஜக தலைமையிடம் கூறி அமைச்சர் பதவி கிடைக்க விடாமல் தடுத்து நிறுத்திவிட்டதாக அப்போது பேசப்பட்டது. அதை ஓபிஎஸ் தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸை விமர்சித்த கோகுல இந்திரா
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசியுள்ள ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, "எடப்பாடியாரை தனிக்கட்சி தொடங்க முடியுமா என சவால் விடுக்கிறார் ஓபிஎஸ். கட்சி எங்களிடம் இருக்கும்போது தனியாக நாங்கள் ஏன் கட்சி ஆரம்பிக்க வேண்டும்? ஓபிஎஸ் வேண்டுமானால் புதிதாக கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும். தனது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என வருத்தப்படும் ஓபிஎஸ், தனது மகன் போட்டியிட்டபோது, அதே தேனி மாவட்டத்தில் நடந்த பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்காத வருத்தம் இல்லையே என விமர்சித்தார்.

நீங்க தனிக்கட்சி தொடங்குங்க
மேலும், அதிமுகவை எப்போதுமே எதிர்த்து வந்து, ஜெயலலிதாவுக்கு தொல்லைகள் கொடுத்து, வழக்குகள் மூலம் தொந்தரவு கொடுத்து, ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமான திமுகவுக்கு ஆதரவாகப் பேசி, கருணாநிதியின் வசனம் என் அப்பாவுக்கு பிடிக்கும், நாங்கள் மனப்பாடம் செய்து வைத்திருப்போம் என ஓபிஎஸ் பேசியதை நாங்கள் மறக்கவில்லை. எங்கள் ஒரே எதிரி திமுக. திமுகவை தைரியமாக எதிர்த்துச் செயல்படும் ஈபிஎஸ் எதற்காக தனிக்கட்சி தொடங்க வேண்டும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் கோகுல இந்திரா.

எம்.பியாக நினைத்தார் ஓபிஎஸ்
திமுகவை வலுவாக எதிர்க்காமல் மகனுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை, நானே எம்.பியாகி விடுகிறேன், எனக்கு சட்டமன்றம் வேண்டாம், நான் டெல்லிக்குச் செல்கிறேன் என்ற முடிவில் இருந்தார் ஓபிஎஸ். ராஜ்யசபா எம்பி பதவியை தொண்டருக்கு கொடுத்தேன் எனச் சொல்வார் ஓபிஎஸ். ஆனால், அவரது மனசாட்சியை தொட்டுச் சொல்லச் சொல்லுங்கள், எம்.பி சீட்டை தனக்கு வேண்டும் என்று கேட்டார் ஓபிஎஸ். எம்.பியாகி, மத்திய அமைச்சராகலாம் எனக் கணக்கு போட்டார் ஓபிஎஸ்.

எப்போதுமே பதவியில் இருக்கவேண்டும்
எப்போதுமே பதவியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஓபிஎஸ். தனது பதவி பறிபோகிறதே என்பதற்காக தர்ம யுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். தர்மயுத்தம் காலத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எத்தனையோ விஷயங்களைப் பேசினார். அப்புறம் எப்படி பல்டி அடித்தார். இவரை எப்படி ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி எனச் சொல்ல முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.

டெல்லியில் ஆதிக்கம் செலுத்த
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, கட்சியில் தனது கை வலுவிழந்து, எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் அதிகரித்ததால், தமிழக அரசியலை விட்டுவிட்டு தேசிய அரசியலில் டெல்லியில் அதிகாரம் செலுத்த ஓபிஎஸ் விரும்பியதாகக் கூறப்பட்டது. டெல்லியில், பாஜக தயவுடன் மத்திய அமைச்சராகி, டெல்லி முகமாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள முயன்றதாக சில தகவல்கள் உலவின. ஆனால், 2019 தேர்தலில் அதிமுகவுக்கு ஒரே ஒரு லோக்சபா எம்.பியே கிடைத்த நிலையில், தனது டெல்லி முயற்சியைக் கைவிட்டு தனது மகனை டெல்லியில் முன்னிறுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதனை கோகுல இந்திரா வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
