இனி எங்க..? அஸ்திவாரமே காலி..‘பெரிய’ திட்டத்தை கமுக்கமாக கைவிட்ட ஓபிஎஸ்! பிளான் மொத்தமும் டமால்!
சென்னை : அதிமுக முப்பெரும் விழாவை பிரமாண்டமாக நடத்த ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்ட நிலையில், தொடர் தோல்விகளால் அந்த பிளானையே அப்ரூட்டாக கைவிட்டு விட்டாராம் ஓ.பன்னீர்செல்வம்.
மார்ச் மாத இறுதியில் கட்சியின் முப்பெரும் விழாவை நடத்துவோம் என மா.செக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இப்போது ஏப்ரலும் பிறந்துவிட்டது. அந்த முயற்சிக்கு முழுக்கு போட்டிருக்கிறது ஓபிஎஸ் டீம்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிந்து, தீர்ப்பும் எடப்பாடிக்கு சாதகமாக வந்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றாலும், ஓபிஎஸ் விடாமல் போராடி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகம்
அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதா கருதப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவருக்கும் இடையே கடுமையான ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக அவரது ஆதரவாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவற்றின் மூலம் எடப்பாடிக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே நீதிமன்ற தீர்ப்பு வந்தன.

எம்ஜிஆர் வழியில் மாஸ் பிளான்
அந்த வகையில் பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும், மக்கள் மன்றத்தில் தங்களுக்கான நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும், விரைவில் மாபெரும் மாநாடு ஒன்றிணை நடத்துவோம் என முடிவெடுத்தது ஓபிஎஸ் தரப்பு. சென்னையில் ஓபிஎஸ் கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பிறந்தநாளோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழா நடத்தப்படும் என திட்டமிட்டனர். எப்படி திண்டுக்கல்லில் எம்ஜிஆர் மக்கள் முன்பு நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டாரோ அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களைப் பார்த்துக் கேட்பார் என ஓபிஎஸ் அணியினர் கூறி வந்தனர்.

ஓங்கிய எடப்பாடி கை
அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தவிர மற்ற யாரையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை, அந்த பதவிக்கு வர யாருக்கும் தகுதி இல்லை அதனால்தான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் கொண்டு வரப்பட்டது எனக் கூறி வந்தனர் ஓபிஎஸ் அணியினர். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கிலும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு வந்ததிலிருந்து எடப்பாடி பழனிசாமி தனது வேகத்தைக் கூட்டியுள்ளார். மாற்றுக் கட்சியிலிருந்து ஆட்களை இழுத்து வரும் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் அணியில் இருக்கும் முக்கிய புள்ளிகளையும் இழுக்க ஸ்கெட்ச் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பம் கொடுக்கும்
பிரம்மாண்டமாக முப்பெரும் விழாவை நடத்தி தனது அணியின் செல்வாக்கை காட்ட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்பிய நிலையில், அதற்கான பணிகளை வைத்திலிங்கம் தான் ஒருங்கிணைத்து வந்தார். இந்த முப்பெரும் விழாவை திருச்சியில் நடத்தலாம் என்ற ஐடியாவும் ஓபிஎஸ் அணிக்கு இருந்தது. திருச்சியில் கூட்டம் நடத்தினால் திருப்பம் இருக்கும் என்பார்கள். ஓபிஎஸ்ஸுக்கு இந்த முப்பெரும் விழா திருப்பமாக அமையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது அந்த முப்பெரும் விழா திட்டத்தையே ஓபிஎஸ் தரப்பு கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

கமுக்கம்
முப்பெரும் விழாவை நடத்த முடிவெடுத்ததே தங்கள் செல்வாக்கைக் காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி கொடுக்கத்தான். குறைந்தது 50 ஆயிரம் பேரையாவது திரட்ட வேண்டும். பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால், அடுத்தடுத்து வந்த தீர்ப்புகளால் பின்னடைவு ஏற்பட்டு இப்போது எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளரே ஆகிவிட்டார். இனி அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டி செல்வாக்கை நிரூபிப்பது ஆகாத காரியம் என்ற முடிவுக்கு ஓபிஎஸ் தரப்பினர் வந்துள்ளனராம். அதனால், முப்பெரும் விழா நடத்தும் முடிவையே சைலண்ட்டாக மறந்துவிட்டு கமுக்கமாக இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications