5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம்
சென்னை: திமுகவில் அண்மையில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் போடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை அந்த தொகுதியில் அதிமுக சார்பாக நின்று வெற்றி பெற்ற ஓபிஎஸ் இம்முறை திமுகவில் போட்டியிடுவதால் வெற்றி பெற்று தனது செல்வாக்கை காட்டு முனைப்பில் உள்ளார். இதற்காக திமுகவினரை உற்சாகப்படுத்த பரிசு மழையை அறிவித்து உள்ளார் ஓ பன்னீர் செல்வம். அதாவது அதிக வாக்கு பெற்று தரும் கட்சியினருக்கு 5 பவுன் தங்க பதக்கம் தருவதாக உறுதியளித்து இருக்கிறராம்.
அதிமுகவில் தலைமை பதவியை பிடிப்பதில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதையடுத்து, அதிமுகவை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுவந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.

திமுகவில் ஓ பன்னீர் செல்வம்
இதனால், டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைந்து கட்சியை கைப்பற்ற நினைத்தார். அந்த முயற்சிக்கும் பலன் கிடைக்காததால், அதிரடி திருப்பமாக திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்று முறை முதல்வராக இருந்தவரும் அதிமுகவில் தலைமை பதவி வகித்தவருமான ஓ பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்தது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுகவில் இணைந்த கையோடு அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட்டும் வழங்கப்பட்டது. போடி நாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பாக ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். ஓ பன்னீர் செல்வத்தை ஆதரித்து தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதே தொகுதியில் மூன்று முறை அதிமுக சார்பாக போட்டியிட்டு ஓ பன்னீர் செல்வம் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை திமுக சார்பாக களத்தில் இறங்கியுள்ளார்.
ஒரு பவுன் தங்கம், ரூ.1 லட்சம் ரொக்கம்
இதனால், தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஓ பன்னீர் செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வெற்றி பெறும் யுக்தியாக திமுகவினருக்கு பரிசு மழை திட்டத்தையும் அறிவித்துள்ளார் ஓ பன்னீர் செல்வம். அதாவது, போடி தொகுதியில் நகரம் மற்றும் ஒன்றிய வாக்குச்சாவடிகளில் திமுகவிற்கு அதிக ஓட்டுக்களை பெற்றுத்தரும் பூத் கமிட்டி பொறுப்பாளருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அதிமுக வேட்பாளரை விட கூடுதலாக பெற்று தந்தால் கூடுதல் பரிசும் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், அதிமுகவை விட அதிக ஓட்டுக்கள் பெற்று தரும் நகர ஒன்றிய செயலாளர்களுக்கு 5 பவுனில் தங்க பதக்கம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாராம். இதனால், உற்சாகம் அடைந்த உடன் பிறப்புகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.. போடி தொகுதியில் அதிமுக சார்பில் விடி நாராயணசாமியும், தவெக சார்பில் எஸ். பிரகாஷ் என்பவரும் நாம் தமிழர் கட்சி சார்பில் கலையரசு என்பவரும் போட்டியிடுகிறார்கள்.
ஓ பன்னீர் செல்வம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஓ பன்னீர் செல்வம், 3,42,882 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நவாஸ் கனி 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருந்தார்.












Click it and Unblock the Notifications