சோதனை மேல் சோதனை! தொட்டதெல்லாம் தோல்வி! காளஹஸ்தியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய சிறப்பு பூஜை!
சென்னை: அரசியலில் தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு ராகு -கேது பூஜை நடத்தியிருக்கிறார்.
நடிகர் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான தங்கப்பதக்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற ''சோதனை மேல் சோதனை போதுமடா சாமி'' என்ற பாடல் யாருக்கு பொருந்துமோ இல்லையோ ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொருந்தும்.

ஒரு பக்கம் அரசியலில் சரிவு, மற்றொரு பக்கம் மூத்த மகன் ரவீந்திரநாத் மூலம் குடும்ப பஞ்சாயத்து என திரும்பிய பக்கமெல்லாம் சோதனைகளை எதிர்கொண்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த நிலையில் தான் தனது ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுரையை ஏற்று, யாருக்கும் சொல்லாமல் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு ராகு -கேது பூஜை நடத்தி விளக்கேற்றியுள்ளார்.
இதன் மூலம் காரியத் தடைகள் தகரும் என நம்பும் ஓ.பன்னீர்செல்வம், வழக்குகளில் வெற்றி கண்டு அரசியலில் மீண்டும் ஏறுமுகம் அடைய விரும்புகிறார். ராகு -கேது பூஜையை பொறுத்தவரை தொட்ட காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக செய்ய வேண்டிய பூஜை என்கிறார்கள் ஜோதிடர்கள்.

அதிமுக -பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலால் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இடையே சரியான கூட்டணி உறவு இல்லை. எடப்பாடி பழனிசாமி மீதான பாஜகவினரின் கோபத்தை பயன்படுத்தி மீண்டும் கட்சியில் விட்ட இடத்தை பிடித்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு காய் நகர்த்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
தனது முயற்சிகளுக்கு ராகு -கேது பூஜை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையிலேயே காளஹஸ்திக்கு சென்று அதனை நிறைவேற்றியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இவரது காளஹஸ்தி பயணமே பூஜை முடிந்த பிறகு தான் அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications