விராலிமலை சி.விஜயபாஸ்கரை தேடி வரும் வில்லங்கம்! சைலண்டாக கோர்த்துவிட்ட ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வில்லங்கத்தில் கோர்த்து விட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்க வைக்கப்பட்ட விடுதிகளுக்கு இன்னும் பாக்கி கட்டணம் செலுத்தவில்லை என சட்டசபையில் திரியை கொளுத்திப் போட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
ஹோட்டலே இல்லாமல் உணவு கொடுத்ததாக பில்கள் வழங்கப்பட்ட முறைகேடுகள் பற்றி ஆய்வு நடத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

சி.விஜயபாஸ்கர்
கொரோனா காலத்தில் கொரோனாவை விட தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். தினமும் மாலை 6 மணிக்கு கொரோனா பாதிப்பு குறித்து இவர் அளிக்கும் பேட்டியை காண ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் தொலைக்காட்சி முன் காத்திருந்தது எல்லாம் ஒரு காலம். இதனிடையே ஏற்கனவே பல்வேறு வழக்குகள் காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வரும் சி.விஜயபாஸ்கருக்கு புதிய வில்லங்கம் ஒன்று தேடி வரவுள்ளது.

ஹோட்டல் பில்
அதாவது கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அதற்கான விடுதிக்கட்டணம், உணவுக்கட்டணத்தை இன்னும் அரசு ஏன் செலுத்தவில்லை என சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். அவர் இந்த கேள்வியை எழுப்பியதன் நோக்கமே சி.விஜயபாஸ்கரை இதில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான் என்பது தனிக்கதை. இதனிடையே இவருக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ஹோட்டலே இல்லாமல் உணவு கொடுத்தோம், தங்க வைத்தோம் என்று சொல்லி போலியாக பில் கொடுத்தால் யார் பணம் கட்ட முடியும் என்றார்.

முறைகேடுகள் பற்றி ஆய்வு
ஹோட்டலே இல்லாமல் உணவு கொடுத்ததாக பில்கள் வழங்கப்பட்ட முறைகேடுகள் பற்றி ஆய்வு நடத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன். ஏற்கனவே சி.விஜயபாஸ்கர் மீது திமுக தலைமை கடும் கோபத்தில் இருந்தும் வரும் நிலையில் ஓபிஎஸ் அவரை வாண்டடாக வம்பில் சிக்க வைத்திருக்கிறார். கொரோனா காலத்தில் உணவகங்களுக்கும், விடுதிகளுக்கும் செலுத்தப்பட்ட கட்டணத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதா என ஆய்வு தீவிரப்படுத்தப்படவுள்ளது.

ஏதோ நம்மால் முடிந்தது
ஏதோ நம்மால் முடிந்தது என்பது போல் இந்த விவகாரத்தில் சைலண்டாக திரியை கொளுத்திப் போட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். சி.விஜயபாஸ்கர் வரிசையில் இன்னும் சில முன்னாள் அமைச்சர்கள் குறித்தும் ஓபிஎஸ் டீம் தரவுகளை தயார் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications