3 முறை முதல்வர்.. ஆனால் கடைசி வரை CM ரூம் பக்கமே போகாத ஓபிஎஸ்.. இந்த வினோத சாதனை பற்றி தெரியுமா
சென்னை: தமிழ்நாடு அரசியலில் அதிமுக சார்பில் 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், இன்று திமுகவில் இணைந்துள்ளார். ஒரு காலத்தில் அதிமுகவில் முக்கிய இடத்தில் இருந்த ஓபிஎஸ், இப்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். இந்தச் சூழலில் அவர் முதல்வராக இருந்த காலகட்டம் குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு வியத்தகு சாதனையை ஓ.பன்னீர்செல்வம் செய்துள்ளார். அதாவது மூன்று முறை முதலமைச்சராகப் பதவியேற்றாலும், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல்வர் அறையை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. மேலும், 3 ஆண்டுகள் முதல்வராக இருந்தாலும் எந்தவொரு முறையும் ஓராண்டு கூட முழுமையாக அவர் முதல்வர் பதவியில் இருக்கவில்லை என்பதும் அவரது தனிச்சிறப்பு.

சிஎம் ரூம் வேண்டாம்
மூன்று முறையும் பன்னீர்செல்வம் அமைச்சராகத் தான் பயன்படுத்திய அலுவலகத்திலிருந்தே செயல்பட்டார்.ஜெயலலிதாவிடம் காட்டிய தீவிர விசுவாசமே இதற்குக் காரணம். இதன் காரணமாகவே அவர் சிஎம் ரூமை கூட பயன்படுத்தவில்லை. அவரது விசுவாசம் மக்களையும் கட்சியையும் கவர்ந்தது. முதலமைச்சருக்கான தனி அறை ஜெயலலிதாவுக்காகவே காத்திருந்தது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளரான ஓ. பன்னீர்செல்வம், 2001 செப்டம்பர் 21ம் தேதிதான் மாநிலம் முழுக்க கவனம் பெறும் ஒரு தலைவராக உருவெடுத்தார். அப்போது தான் உச்ச நீதிமன்றத்தால் ஜெயலலிதா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓபிஎஸை முதல்வராக ஜெயலலிதா அறிவித்தார். அன்றிரவே ஓபிஎஸ் முதலமைச்சரானார்.
முதல்முறை
அதிமுகவில் ஏகப்பட்ட சீனியர்கள் இருக்கும் சூழலில், ஓபிஎஸ் பெயரை ஜெயலலிதா டிக் அடித்தது பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. ஓபிஎஸ் தற்காலிகமாகவே முதல்வராக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. இதன் காரணமாகவே அதிகாரிகள் உட்பட யாரும் அவரைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 2002 மார்ச் மாதம், ஜெயலலிதா TANSI வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு, ஓபிஎஸ் எந்தவொரு பிரச்சினையும் செய்யாமல் ராஜினாமா செய்தார். ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
இரண்டாவது முறை
அவரது இந்த விசுவாசமே அமைச்சரவையில் அவருக்கு இரண்டாவது இடத்தைப் பெற்றுத் தந்தது.. மூத்த அரசியல்வாதியான சி. பொன்னையன் கூட அந்த இடத்தை இழந்தார். 2014 செப்டம்பர் இறுதியில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் ஒரு சிறப்பு நீதிமன்றத்தால் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழலில், பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சர் நாற்காலிக்கு வந்தார். கண்ணீருடன் பதவியேற்ற அவர், 2015 மே மாதம் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர ராஜினாமா செய்தார்.
வினோதச் சாதனை
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். 2016 டிசம்பர் 6 அன்று அதிகாலை 1 மணிக்கு நடந்த இந்தப் பதவியேற்பு விழா, நாட்டின் வரலாற்றிலேயே நள்ளிரவு 12 மணிக்கு மேல் நடந்த ஒரே நிகழ்வாக அமைந்திருந்தது. எனினும், இதுவே அரசியல் அத்தியாயம் சரியவும் காரணமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications