ஓ பன்னீர் செல்வத்தின் பிளான் என்ன? முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு.. சென்னையில் நடந்த மீட்டிங்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இன்று காலையில் முதல்வர் ஸ்டாலினை (O Panneerselvam Stalin meets) சந்தித்து பேசினார். காலையில் நடைப்பயிற்சி சென்ற போது முதல்வர் ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து உடலநலம் குறித்து கேட்டறிந்துள்ளார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு குறித்து இன்று ஓ பன்னீர் செல்வம் முக்கியமான முடிவை வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
முதல்வர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்று சந்தித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். அதிமுகவில் மீண்டும் சேர அவர் விருப்பம் காட்டியதாகவும், ஆனால், அவரை கட்சியில் சேர்க்கும் காலம் கடந்து விட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

பாஜகவில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்
மலை போல் நம்பியிருந்த பாஜகவும் தற்போது ஓ பன்னீர் செல்வத்தை கண்டுகொள்ளாமல் விட்டது அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்தார். தமிழகம் வரும் மோடியை சந்திக்க அனுமதி வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வத்திடம் அப்பாயிண்ட் மண்ட் கேட்டு இருந்த நிலையில், அவருக்கு சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜிகே வாசன் உள்ளிட்டோர் சந்தித்தனர். ஆனாலும் ஓ பன்னீர் செல்வத்தை மோடி சந்திக்காது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. பாஜக மதிக்காததால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார்.
முக்கிய முடிவினை வெளியிடுகிறார்?
பாஜகவை பெரிதாக விமர்சிக்காத ஓபிஎஸ், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசை கண்டித்து கடுமையாக அறிவிக்கை விட்டு இருந்தார். சமக்ர சிக்ஷா அபியான் திட்டம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். மத்திய அரசின் செயல் கண்டனத்திற்குரியது, மத்திய அரசின் செயல் கல்வி உரிமை சட்டத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ பன்னீர் செல்வம் விலகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இத்தகைய சூழலிதான் தனது நிர்வாகிகளுடன் இன்று கலந்து ஆலோசிக்கும் ஓ பன்னீர் செல்வம் மிக முக்கிய முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார். இன்று கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியாகுமா? அல்லது தனிக்கட்சி தொடங்க உள்ளாரா? என பரபரப்பான பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஸ்டாலினுடன் ஓ பன்னீர் செல்வம் சந்திப்பு
இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலினை இன்று சென்னயில் ஓ பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அண்மையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இன்று சென்னை அடையாறு பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, அவரை சந்தித்த ஓ பன்னீர் செல்வம் நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பரபரப்பான அரசியல் சூழலில் முதல்வர் ஸ்டாலின் - ஓ பன்னீர் செல்வம் இடையேயான இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications