பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்.. நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு அதிரடி முடிவு!
சென்னை: தமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று முக்கிய முடிவை எடுத்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து பல கட்டங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் ஓபிஎஸ். எனினும், கட்சி எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஓபிஎஸ் தற்போது ''அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு'' என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

பாஜக உடன் ஓபிஎஸ்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஓபிஎஸ், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கும் தோல்வியே கிட்டியது. இச்சூழலில்தான் கடந்த முறை பிரதமர் தமிழகம் வந்த போது அவரை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கப்படவில்லை. அதன் பின்னர் அதிமுக - பாஜக கூட்டணி உருவானது.
அந்த சமயத்திலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். அப்போதும் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அது தனக்கு வருத்தம் என்று ஓபிஎஸ் பதிவு செய்திருந்தார். பாஜக அணியில் ஓபிஎஸ் அணி இருக்கிறதா என்ற கேள்விக்கு விடையே இல்லாமல் இருந்து வருகிறது.
கழற்றிவிட்ட பாஜக?
இப்படியான சூழலில்தான் அண்மையில் தூத்துக்குடிக்கு வந்த பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஓபிஎஸ். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததாகவும், இதனாலேயே பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கூட்டணியில் இருந்து விலகவேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் ஓபிஎஸ் அதற்குள் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வி இருந்து வருகிறது. ஓபிஎஸ்ஸின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருக்கக் கூடிய பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும் எனக் கூறினார்.
கோபம் கொண்ட ஓபிஎஸ்
இந்நிலையில் தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா திட்ட நிதி 2151 கோடி ரூபாயை அரசியல் காரணத்துக்காக தர மறுப்பது கண்டனத்துக்குரியது என்றும் அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஓபிஎஸ் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். மத்திய அரசை கண்டித்து ஓபிஎஸ் முதல் முறையாக அறிக்கை விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கண்டன அறிக்கை, பாஜகவை முற்றிலுமாக எதிர்க்க அவர் முடிவு செய்துவிட்டதைக் காட்டுகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று முக்கிய அறிவிப்பு
நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், "சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன். அனைத்து கேள்விகளுக்கும் நாளை சென்னையில் உரிய பதில் அளிக்கப்படும்'" என்று தெரிவித்தார். அதன்படி இன்று சென்னையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஓபிஎஸ் அணி.
பாஜக கூட்டணியில் இருந்து விலகல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் அணி இன்று வெளியிட்டுள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
யாரையும் வீழ்த்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பது நாடே அறியும், பாஜக உடனான உறவு முறிந்துவிட்டது என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications