தாமரை சின்னமா? எத்தனை சீட்? ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த தேதி குறித்த ஓபிஎஸ்.. பரபரக்கும் களம்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் வரும் 29ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், சின்னம் தொடர்பாகவும் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், ஓபிஎஸ் தரப்பினரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்தது. அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போய்து அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதிகள், ஓபிஎஸ் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால், ஓபிஎஸ், அதிமுக கட்சிக் கரை இல்லாத வேட்டியையே அணிந்து வருகிறார். ஓபிஎஸ் காரிலும் அதிமுக கொடி தற்போது பயன்படுத்தப் படுவதில்லை.
ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: அதிமுக எனும் கட்சி பெயரையும், லெட்டர் பேடையும், இரட்டை இலை சின்னத்தையும் ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கப்படிருப்பதன் காரணமாக, முன்னாள் முதல்வர் என்ற பெயரில் தான் ஓபிஎஸ் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். மேலும், அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு என்ற பெயரிலேயே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார்படுத்துவது, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் விவாதிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 29-ம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெறும் என பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் முடிவு: வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் கூறி வந்தாலும், அது நடைமுறையில் சாத்தியமில்லை என்றே தெரிகிறது. இறைவன் கொடுக்கும் சின்னத்தில் போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார் ஓபிஎஸ்.
தாமரை சின்னம்?: ஓபிஎஸ் அணியினர், பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜகவில், ஓபிஎஸ் தரப்புக்கு எத்தனை சீட் வழங்கப்படும் என்பதும் இதுவரை முடிவு செய்யப்படாத ஒன்றாக உள்ளது. தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடக்கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு ராஜ்யசபா சீட்டையும் பாஜக உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வரும் தேர்தலில் தோல்வியடைந்தாலும், அவரை ராஜ்யசபா எம்.பி ஆக்குவதாக பாஜக் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.
பாஜகவை முழுமையாக ஆதரிப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பான ஆட்சியை தந்துள்ளது என்றும் கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக பாஜகவை ஆதரிக்கிறோம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது பற்றி 29ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் ஓபிஎஸ்.
டிடிவி தினகரன் ஓபிஸ் ஒரே மேடையில்: மேலும், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாளை ஒட்டி தேனியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை ஏற்று ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து பங்கேற்க இருக்கிறார்.
கடந்த ஆண்டு இதே ஜெயலலிதா பிறந்தநாளில் தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும், ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் இணைந்து போட்டியிட இருப்பதால் இந்த கூட்டம் கவனிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications