அதிமுக வெளிநடப்பின் போது ஏதோ சொல்லிய ஓபிஎஸ்.. கண்டுக்கொள்ளாமல் சென்ற செங்கோட்டையன்? என்ன நடந்தது
சென்னை: இன்று தமிழக சட்டசபையின் போது சட்டம் ஒழுங்கு தொடர்பான காரசார விவாதத்தின் போது அதிமுக எம் எல் ஏக்கள் சபையை வெளிநடப்பு செய்த போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் வெளிநடப்பு செய்தார். அப்போது ஓ பன்னீர் செல்வம், செங்கோட்டையனிடம் எதோ பேச முயன்றது போல் தெரிந்தது. ஆனால், இதனை பொருட்படுத்தாமல் செங்கோட்டையன் அவரை தாண்டி கிளம்பினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதிமுகவில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்புவதாக அமைந்து வருகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளருடன் பாராமுகத்துடன் நடந்து கொண்டது அக்கட்சியினர் மத்தியில் விவாதப்பொருளானது.

எடப்பாடிக்கு ஆதரவாக பேசிய ஓபிஎஸ்
இது ஒருபக்கம் என்றால் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம், சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தார். அதிமுக உறுப்பினர் என்ற அடிப்படையில் கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பதால் வாக்களித்தாக ஒ பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார். அதேபோல, சட்ட சபையிலும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் தற்போது ஒபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் இணக்கம் காட்டி வருகிறார்கள்.
அதேபோல் கடன் விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுடன், எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு ஆதரவாக ஓ.பன்னீர் செல்வம் பேசினார். "கடன் வாங்குவது தவறு கிடையாது. வாங்கிய கடனை மூலதன செலவுதான் செய்ய வேண்டும். அந்த நியதியை நீங்கள் கடைப்பிடித்தீர்களா? வாங்கிய கடனை நீங்கள் சரியாக செலவு செய்யவில்லை" என்று பேசியிருந்தார். இப்படி ஓ பன்னீர் செல்வம் திடீரென்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசினார்.
வெளிநடப்பு செய்த அதிமுகவினர்
ஓ பன்னீர் செல்வம் தரப்பு மீண்டும் அதிமுகவில் இணைய ஆர்வம் காட்டினாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. எனினும், கடந்த சில நாட்களாக சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது ஓ பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் இணக்கமான போக்கு ஏற்படுவது போல காட்டுகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் பிரிந்த கைகள் மீண்டும் இணையப்போகிறதா? என்ற பேச்சும் எழாமல் இல்லை. இத்தகைய சூழலில் இன்று சட்டமன்றத்தில் மற்றொரு நிகழ்வும் நடைபெற்றது. அதாவது இன்று அவையில், கேள்வி நேரம் முடிந்ததும் நேரம் இல்லா நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச முயன்றார். அப்போது ஏற்பட்ட காரசார கருத்து மோதலுக்கு பிறகு, அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தாண்டி சென்ற செங்கோட்டையன்
அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த போது, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது இருக்கையில் அமர்ந்து இருந்தார். சட்டமன்றத்தில் இரண்டாவது வரிசையில் ஓ பன்னீர் செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதே வரிசையில்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரும் அமர்ந்து உள்ளனர். இதனால், வெளிநடப்பு செய்த போது ஓ பன்னீர் செல்வத்தை தாண்டியே, செங்கோட்டையன் சென்றார்.
அப்போது ஓ பன்னீர் செல்வம், செங்கோட்டையனிடம் எதோ பேச முயன்றது போல் தெரிந்தது. ஆனால், இதனை பொருட்படுத்தாமல் செங்கோட்டையன் அவரை தாண்டி சட்டமன்றத்தில் இருந்து வெளியே கிளம்பினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. செங்கோட்டையன் கவனிக்காமல் சென்றாரா? அல்லது கண்டுகொள்ளாமல் சென்றாரா? என்பது தெரியாத நிலையில், தற்போதைய அரசியல் சூழலுக்கு இடையே, இந்த நிகழ்வு மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications