எடப்பாடி ஒன்று சொல்ல.. ஓபிஎஸ் அதை மறுக்க.. உயர் நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்.. நாளை மீண்டும் விசாரணை
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கில் இன்று பரபரப்பு வாதங்கள் நடைபெற்றன.
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இன்று விசாரணை நடத்தினார்.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 2 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி கூறி உள்ளதால், இதனால் இன்று ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் இன்னொரு மனுதாரர் அம்மன் வைரமுத்து ஆகியோர் வாதங்கள் கேட்கப்பட்டன.
இன்றைய வழக்கில் நீதிபதி ஜெயசந்திரன் இரண்டு தரப்பிடமும் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

கேள்விகள்
நீதிபதி விசாரணையின் போது, பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகள்படி நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து மட்டும் வாதிடும்படி இரு தரப்பு வழக்கறிஞர்களையும் நீதிபதி கேட்டுக் கொண்டார்.
பொதுக்குழுவின் போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.
இதையடுத்து, பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர், ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியில் பிளவு ஏற்பட்டது குறித்து விளக்கினார் , மேலும் இரு பிரிவுகளும் இணைந்து 2017ல் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியை கலைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது குறித்தும், இரு பதவிகளுக்கும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்துவது என விதிகளில் திருத்தம் செய்தது குறித்தும் விளக்கினர்.

விளக்கம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலியாகி விடும் என்றால் அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்று கூறினார். அதேபோல் பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இருவராலும் செயல்பட முடியவில்லை எனக் கூறுவது தவறு என்றும், பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பான விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் வாதிட்டனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி எந்த கூட்டமும் கூட்ட முடியாது எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் விருப்பத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் செல்லாததாக்கி விட முடியாது எனவும் பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

பரபர வாதம்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் தனது வாதத்தை துவங்கும் முன், நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என கூறி அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன் ? எனவும், பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா எனவும் விளக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாவிட்டால் பொருளாளர், தலைமைக் கழக செயலாளர் கட்சியை நிர்வகிக்க விதிகள் வகை செய்வதால் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை எனச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதம் வைத்தார். மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டு தான் தற்காலிக அவைத்தலைவர் நியமிக்கப்பட்டார் எனவும், ஜூன் 23 பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்பட்டதாகக் கூறினார்.

பன்னீர்செல்வம் எதிர்ப்பு வாதம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு, அவைத்தலைவர் அறிவிப்புக்கு முன் பன்னீர்செல்வம் வெளியேறி விட்டதாகவும், தமிழ் மகன் உசேனை முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை எனத் தெரிவித்தது.
கட்சியில் பெரும்பான்மையினர் ஒற்றை தலைமையை விரும்புவதால், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது., எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, நான்கு மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
Recommended Video

விளக்கம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தொடர்பாக கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த 2021ம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த ஜூலை 11 வரை இருவரும் எடுத்த முடிவுகள் செல்லும் என்பதால் அவர்களால் நியமிக்கப்பட்ட அந்த பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனமும் செல்லும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
வழக்கில் வாதங்கள் நிறைவடையாததால், விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் நாளை காலை 10:30க்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications