அக்.17 முதல் மீண்டும் புரட்சிப் பயணத்தை தொடங்கும் ஓ.பன்னீர்செல்வம்! பயணத் திட்டம் ரெடி!
சென்னை: அக்.17 ஆம் தேதி முதல் மீண்டும் தனது புரட்சிப் பயணத்தை தொடங்கவுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இது தொடர்பான அறிவிப்பு வரும் 11ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
அதிமுக என்றால் நான் தான் என்று எடப்பாடி பழனிசாமி பலமுறை நிரூபித்துவிட்ட நிலையிலும், எதற்கும் அசராமல் தனது சட்டப் போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் சலிக்காமல் முன்னெடுத்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி காஞ்சிபுரத்தில் புரட்சிப் பயணத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் மழை வெளுத்து வாங்கியதால் அடுத்தடுத்த பயணங்களை தொடராமல் அப்படியே நிறுத்தி வைத்தார். அதற்குள் தனது மூத்த மகன் ரவீந்தரநாத் பிரச்சனை, எடப்பாடி பழனிசாமி-அண்ணாமலை மோதல் என அடுத்தடுத்த நிகழ்வுகள் வரிசை கட்டியதால் பயணத்தை தொடர்ந்து ஒத்தி வைத்துக் கொண்டே வந்தார்.
இந்நிலையில் அதிமுக -பாஜக கூட்டணி முறிந்துவிட்ட நிலையில் மீண்டும் தனது புரட்சிப் பயணத்தை இம்மாதம் 17ஆம் தேதி தொடங்குகிறார். இதில் கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால் ஓ.பன்னீர்செல்வம் புரட்சிப் பயணத்தை தொடங்கும் அக்டோபர் 17ஆம் தேதி என்பது எம்.ஜி.ஆரால் அதிமுக ஆரம்பிக்கப்பட்ட நாள் ஆகும். அதுமட்டுமல்ல அன்றைய நாள் வளர்பிறையும் கூட. இதனால் தான் அன்றைய தினமே ''புரட்சித் தமிழர்'' எடப்பாடிக்கு எதிரான தனது புரட்சிப் பயணத்தை தொடங்குகிறாராம் ஓ.பன்னீர்செல்வம்.
இவர் புரட்சிப் பயணம் தொடங்குவது இருக்கட்டும் இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க வைட்டமின் 'ப' வை இறக்க வேண்டுமே என பல நிர்வாகிகளும் இப்போதே கலக்கம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமியும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தில் இருக்கிறார். எதற்காக என்றால் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்திப்பதற்காக தான்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே சுற்றுப்பயணம் செல்லவிருப்பதால் தமிழக அரசியல் களம் களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சிப் பயணத்திற்கு பாஜகவின் திரைமறைவு ஆதரவு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications