ஓபிஎஸ் தொடங்கிய 2வது தர்ம யுத்தம்.. அவரது இளைய மகன் ஜெய பிரதீப் போட்ட பரபரப்பு ட்வீட்
சென்னை: இரண்டாவது தர்ம யுத்தம் ஆரம்பமாகியுள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ள நிலையில், அவருடைய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவருடைய இளைய மகன் ஜெய பிரதீப், அவரை பரதன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவை முழுமையாக எடப்பாடி பழனிசாமி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த நிலையில், அதை மீட்க இரண்டாவது தர்மயுத்தம் தொடங்குவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை சசிகலா பதவியை ராஜினாமா செய்ய கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பதவியை ராஜினாமா செய்த ஓ பன்னீர்செல்வம் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி இரவு 8.50 மணிக்கு சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு நீண்டநேரம் தியானம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்தேன் என கண்ணீர் மல்க கூறியதுடன் தாம் தர்ம யுத்தம் தொடங்கி உள்ளதாகவும் பிரகடனம் செய்தார். இதுதான் ஓபிஎஸ் நடத்திய முதல் தர்ம யுத்தம் ஆகும். அதன்பிறகு சசிகலா டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

ஓபிஎஸ்க்கு சிக்கல்
ஆனால் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியதால், ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. அவரை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனை ஓ பன்னீர்செல்வம் ஏற்கவில்லை. உண்மையான அதிமுக தாங்கள் தான் என்று கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய்நகர்த்தி வருகிறார். ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இல்லை சின்னத்தையும் பெற்றுவிட்டார். தற்போது பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கும் நிலையில், ஓ பன்னீர்செல்வம் நேற்று தனது ஆதரவாளர்களிடம் பேசும் போது இரண்டாவது தர்ம யுத்தம் ஆரம்பமாகியுள்ளது என்று சூளுரைத்தார்.

தகுதியை இழந்துவிட்டார்
அப்போது ஓ பன்னீர்செல்வம் பேசும் போது, அதிமுகவில் தலைமைப் பதவியை தொண்டர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் உருவாக்கி இருந்தார். அதை ஜெயலலிதா கட்டிக்காத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தொண்டர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டவிதிகளை மாற்றி தலைமைப் பதவிக்கு வந்திருக்கிறார் ஒருவர். அவர் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை. அதற்கான தகுதியை அவர் (எடப்பாடி பழனிசாமி) இழந்துவிட்டார். அவரின் இந்த செயலை எதிர்த்துதான் தர்மயுத்தம் 2.0 தொடங்கி உள்ளோம்.

நமக்கு சாதகமாகும்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நமது வேட்பாளரை திரும்பப் பெற்போம். இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம் என்றும் அறிவித்தோம். ஆனால் அவர்கள் உரிய மரியாதை கொடுக்கவில்லை. மனதில் கொடூர புத்தியுடன், இந்த இயக்கத்தை தனது இரும்பு பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என அவர் (எடப்பாடி) நினைக்கின்றார். அதை அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் உறுதியாக உடைத்தெறிந்துவிடுவார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில். மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அப்போது தான் உண்மை தெரியவரும். அதுவரை நாம் பொறுத்திருப்போம். விரைவில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வர உள்ளது. அது நமக்கு சாதகமாக இருக்கும்" இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

பரதன் ஓபிஎஸ்
இந்நிலையில் இரண்டாவது தர்ம யுத்தம் ஆரம்பமாகியுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ள நிலையில், அவருடைய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவருடைய இளைய மகன் ஜெய பிரதீப், அவரை பரதன் என கூறியுள்ளார். ஓ பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை, கட்சியில் பொறுப்புகளை விட்டுக்கொடுத்ததை குறிக்கும் வகையில் பரதன் என அவரது இளைய மகன் ஜெயபிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

2017ல் நடந்தது
முன்னதாக முதல் தர்மயுத்தம் குறித்து ஜெயபிரதீப் வெளியிட்டிருந்த பதிவில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றார். அதற்குப் பிறகு ஒருசில தலைமை நிர்வாகிகளின் தூண்டுதலால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் வர வேண்டும் என்று அவர்களை மூளைச்சலவை செய்தார்கள். அப்போது ஓ.பன்னீர்செல்வம், நான் முதலமைச்சர் பதவியைத் தந்துவிடுகிறேன். ஆனால், அதற்கு தற்போதைய காலச் சூழ்நிலைகள் சரியாக இல்லை. தற்போது கட்சியை வலுப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஆனால், அவருடைய கருத்தை அப்போது யாரும் ஏற்கவில்லை.

ஓபிஎஸ் என்ன செய்தார்
ஓ.பன்னீர்செல்வம் ஒருசில தலைமை நிர்வாகிகளின் வற்புறுத்தலால் தனது முதலமைச்சர் பதவியை கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டு, கட்சிக்கு மிகப்பெரிய சோதனை வரப்போகிறது என்ற மனவருத்தத்துடன் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து உண்மை நிலவரத்தைத் தெரிவித்தார். அவர் சுயநலத்தோடு பதவிக்காக அங்கு சென்றார் என்றால், எம்.எல்.ஏ-க்களை உடன் அழைத்துச் சென்றிருக்கலாம் அல்லது தன்னுடைய ஆதரவாளர்களுடன் அங்கு சென்று அமர்ந்து அரசியல் செய்திருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை. தனி ஒருவராக அங்கு சென்று தன்னுடைய மனதில் தோன்றிய கருத்தைத் தெரிவித்தார். அந்தப் பிரச்னையை அப்போதே கலந்து பேசி, சரி செய்திருந்தால் பிரச்னைகள் அன்றே முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க-வுடன் தொடர்புவைத்துக்கொண்டு, கட்சிக்கு விரோதமாகச் செயல்படுகிறார் என்று அவரைக் கட்சியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டனர். அதற்குப் பிறகும் அமைதியாக இருந்தால் கட்சிக்கு நல்லதில்லை என்றுதான் தர்மயுத்தத்தைத் தொடங்கினார். அனைத்துச் செயல்களிலும் நிறைகளும் குறைகளும் நிறைந்திருக்கும்; நல்லது கெட்டதும் நிறைந்திருக்கும். அதைத் தலைமை நிர்வாகிகள் உணர்ந்து குறைகளை நிவர்த்திசெய்து நிறைகளைப் பாராட்டி, அடுத்து வரும் காலங்களில் கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications