டெல்லியிலிருந்து வந்த பிறகு முக்கிய முடிவெடுப்பார் அண்ணன் ஓபிஎஸ்! ஒன் இந்தியா தமிழுக்கு ஓ.ராஜா தகவல்
சென்னை: டெல்லியிலிருந்து வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவெடுப்பார் என அவரது தம்பி ஓ.ராஜா தெரிவித்துள்ளார்.
இன்று இரவு டெல்லியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பிவிடுவார் என்றும் நாளை அடுத்தக் கட்ட நகர்வு குறித்து அறிவிப்பார் என்ற தகவலையும் வெளியிட்டார்.
சசிகலாவின் தூதுவராக ஓ.பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய அவரது தம்பி ஓ.ராஜாவிடம் ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர் கூறிய விவரம் வருமாறு;

ஓ.ராஜா தகவல்
''நான் சென்னையிலிருந்து தேனிக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறேன். அண்ணன் டெல்லிக்கு போயிருக்கிறார், உங்களுக்கே தெரியும் அது. இன்று இரவு அவர் சென்னை திரும்பிவிடுவேன் எனக் கூறியுள்ளார். நாளை முக்கிய முடிவெடுப்பார் என கருதுகிறேன். நேற்று அண்ணனோடு தான் கூட இருந்தேன். ஆனாலும் என்னால் எதுவும் பேச முடியவில்லை. முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாலும் அவர் வருத்தத்தில் இருந்ததாலும் பேச முடியவில்லை.''

சசிகலாவுடன் சந்திப்பு?
''இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் அவர் ஊருக்கு வரமாட்டார் என நினைக்கிறேன். சென்னையில் தான் இருப்பார், இது தொடர்பாக மேற்கொண்டு அவர் பேசுவது தான் சரியாக இருக்கும். நான்பாட்டுக்கு ஏதாவது ஒன்றைக் கூறினால் அது பெரிய விவகாரமாகிவிடும்'' எனக் கூறி சசிகலா உங்களிடம் என்ன சொல்லி அனுப்பினார் உள்ளிட்ட இன்னும் சில கேள்விகளுக்கு பதிலளிப்பதை நாசூக்காக தவிர்த்துவிட்டார் ஓ.ராஜா. இதனிடையே ''நல்ல முடிவு'' என இவர் சொல்வதை வைத்து பார்த்தால் சசிகலாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு நிகழ்ந்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை எனத் தெரிகிறது.

சையது கான்
இதனிடையே தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கானை நாம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது, ''அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு இதற்கு முன் நடந்திருக்காது. கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரையே வாயில் சொல்ல முடியாத வார்த்தைகளால் எடப்பாடி ஆதரவாளர்கள் திட்டினார்கள். ஒரு நல்ல தலைவராக இருந்திருந்தால் அந்த நேரமே எழுந்து மைக்கை பிடித்து ஆதரவாளர்களை கண்டித்து அமைதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி அவ்வாறு செய்யவில்லை.''

மனம் நொந்து
''ஓ.பன்னீர்செல்வம் இப்படி வருத்தப்பட்டு நான் இதுவரை பார்த்ததே இல்லை. அந்தளவுக்கு மனம் நொந்துவிட்டார் நேற்று. பொதுக்குழுவில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு செல்லும் வரை மிகவும் இறுக்கமாக இருந்தார். எங்களுக்கெல்லாம் ரொம்ப சங்கடமாக இருந்தது.டெல்லிக்கு போயிருக்கார், பார்ப்போம் நல்ல முடிவை விரைவில் எடுப்பார்'' என ஓ.ராஜாவை போலவே இவரும் கூறினார். மொத்தத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வைப்பதற்கான முயற்சிகள் நடப்பது மட்டும் இதிலிருந்து புரிகிறது.












Click it and Unblock the Notifications