சென்னையில் நள்ளிரவில் ஜேசிபியுடன் போன அதிகாரிகள்.. விடிந்த போது எதுவுமே இல்லை.. அதிர்ந்த வியாபாரிகள்
சென்னை: சென்னை திருவொற்றியூர் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். அங்கு ஆக்கிரமிப்பு கடைகளை அடியோடு இடித்து அகற்றினார்கள். விடிந்ததும் வந்து பார்த்த வியாபாரிகள் கண்ணீரில் உறைந்தனர்.
சென்னையை பொறுத்தவரை சாமானிய மக்கள் கடைகளை விலைக்கு வாங்கி அங்கு வியாபாரம் நடத்துவதோ, வாடகைக்கு இடம் பிடித்து கடை நடத்துவதோ இயல்பாகவே சாத்தியம் இல்லாத ஒன்று. ஏனெனில் கடைகளின் விலை பல லட்சம் அல்லது கோடி என்கிற நிலையில் உள்ளது. வாடகையை பொறுத்தவரை மெயின் ஏரியாக்களில் சிறிய கடைகளுக்குகே சர்வ சாதாரணமாக 20000 முதல் 30000 வரை கேட்பார்கள்.

சென்னையில் பெரிய கடைகள் வாடகை லட்சத்தை தாண்டும். சென்னையின் உள்பகுதிகளில் 10000 அல்லது 15000 என்கிற அளவில் வாடகை இருக்கும். அதுவுமே சிறிய அளவில் தான் வைக்க முடியும். அதற்கு அட்வான்ஸ் தொகையே 2 லட்சம் வரை இருக்கும். இதெல்லாம் ஏழை மக்கள், சாலையோரம் தள்ளுவண்டி போட்டு கடை வைப்போருக்கு சாத்தியமே இல்லாத தொகை.
இதன் காரணமாகவே பலரும் சாலையோரம் தள்ளுவண்டி கடை போட்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். சாலையோரம் என்றாலும், சாலையை ஒட்டியுள்ள இடத்துக்காரருக்கு தினசரி வாடகையாக 200 முதல் 300 வரை கொடுத்தால் தான் கடையே வைக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. அதேநேரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் அவற்றை போலீசார் விட்டுவைக்க மாட்டார்கள். உடனடியாக அகற்றி விடுவார்கள்.அதேநேரம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்றால், அங்குமே அவ்வளவு எளிதாக கடை வைக்க முடியாது.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் காய்கறி, மளிகை, குளிர்பான கடைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இது தவிர இங்கு சாலையோரம் ஆக்கிரமித்து பழக்கடை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைத்தும் ஏராளமானோர் வியாபாரம் செய்து வந்தார்கள். காலடிப்பேட்டை மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக இருக்கும். சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்ததாக புகார்கள் எழுந்தது. இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் அதிகரித்தன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் காலடிப்பேட்டை மார்க்கெட்டுக்கு வந்தனர். அவர்கள் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை அதிரடியாக அகற்றினர். மேலும் விதிமுறைகளை மீறி இருந்த கடைகளின் பெயர் பலகைகள், கடை வாசலில் இருந்த சிறிய விளம்பர பதாகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகளையும் அதிரடியாக இடித்து அகற்றினர்.
அதே நேரம் மாநகராட்சி அதிகாரிகள், காலடிப்பேட்டை மார்க்கெட்டில் அகற்றப்பட்ட கடையில் இருந்த பொருட்களை எடுத்து செல்லாமல் அப்படியே சாலையில் வீசிச்சென்றுவிட்டார்கள். நள்ளிரவில் கடைகள் அகற்றப்பட்டது என்பதால் அந்த பகுதி வியாபாரிகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகள் வந்தபோது மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அப்பகுதியே அலங்கோலமாக கிடப்பதை கண்டு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சாலையோர வியாபாரிகள் சிலர் தங்களது கடைகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டதை கண்டு கண்ணீர் விட்டனர்.
ஒரு கடடத்தில் கடும் கோபம் அடைந்த ஏராளமான வியாபாரிகள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்றார்கள்.அவர்களிடம் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாநகராட்சி அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள். ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காமல் இரவோடு இரவாக அகற்றிவிட்டு சென்றுள்ளார்கள். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications