விபத்தில் சிக்கிய கோரமண்டல்.. மீண்டும் வந்தது.. சென்னையில் இருந்து இன்று ஷாலிமார் புறப்பட்டு சென்றது
சென்னை: ஒடிசாவில் விபத்துக்குள்ளன கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மீண்டும் தனது சேவையை தொடங்கியது. சென்னையில் இருந்து காலை 10.45 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஷாலிமர் ரயில் நிலையத்தில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரயிலில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த ரயில், ஒடிசாவின் பாலசோர் அருகே வந்த போது பெங்களூர்- கொல்கத்தா சென்ற ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிர்சேதம் பெரும் அளவில் இருந்தது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விபத்து நடந்த உடனேயே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். சனிக்கிழமை மதியம் மீட்பு பணிகள் முடிந்த நிலையில், ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அங்கே அப் லைன், டவுன் லைன் மற்றும் லூப் டிராக் என 3 பாதைகள் இருந்தன. இதில் டவுன் லைனில் இப்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது.
விபத்து நடைபெற்ற 51 மணி நேரத்திற்கு பிறகு நேற்று இரவு சரக்கு ரயில் சேவை தொடங்கியது. இந்த ரயில் அந்த வழியாகச் செல்லும் போது அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயிலைப் பார்த்துக் கும்பிட்டு வணங்கினார். விபத்துக்குள்ளான இடத்தில் பிற பாதைகளில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
ஒடிசா வழியாக செல்லும் 56 விரைவு ரயில்கள் வேறு பாதை வழியே செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்பட ஒடிசா வழியாக செல்லும் 125 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மீண்டும் தனது சேவையை தொடங்கியது. சென்னையில் இருந்து ஷாலிமாருக்கு செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.
காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 10.45 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் வழக்கம் போலவே பயணிகள் அதிக அளவில் பயணித்ததை காண முடிந்தது. ஒரு சில பயணிகளிடம் கேட்ட போது, கொஞ்சம் பயமாகவே உணர்வதாகவும் இருந்தாலும் வேறு வழியில்லை என்றும் கூறினர்.












Click it and Unblock the Notifications