பழைய ஓய்வூதிய திட்டம் விடுங்க.. போனஸ் உட்பட அரசு ஊழியர்களுக்கான 9 குட் நியூஸ்.. காங்கிரஸ் மகிழ்ச்சி
சென்னை: அரசு ஊழியர்களுக்கான 9 புதிய அறிவிப்புகளை பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.. அரசு ஊழியர்களுக்கான சிறப்பு அறிவிப்புகளை குறிப்பாக, ஓய்வூதியம், அகவிலைப்படி, மகப்பேறு விடுப்புகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. இது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை தந்து வரும்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியும் இதனை வரவேற்றுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அரசு ஊழியர்களுக்கு இன்று 28ம் தேதி 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இது தொடர்பாக முதல்வர் பேசும்போது, "தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பைச் சரண் செய்யும் நடைமுறை, வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

அரசு ஊழியர்கள்
முன்னதாக வரும் வருடம் ஏப்ரல் மாதம் அமலுக்கு வரும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த வருடமே அமல்படுத்தப்பட உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்படும். அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.20 ஆயிரம் ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கப்படும். கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு 1 லட்சம் ரூபாயும், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வூதியம் - பரிசுத்தொகை
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்... ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ. 4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும்.
பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதி காண் பருவத்தை (Probation Period) கணக்கில் எடுக்காததால் பெண் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதிகாண் பருவத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
பழைய ஓய்வூதிய திட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய தமிழக நியமித்த குழு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கையை அளிக்கும்" என்று அறிவித்திருந்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில, முதல்வரின் இந்த 9 அறிவிப்புகளையும் தமிழக காங்கிரஸ் வரவேற்றுள்ளது.. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
வரும் ஆண்டில் நிறைவேறும்
"நிதிநிலை பற்றாக்குறை இருந்த போதிலும், அரசு ஊழியர்களின் நலனுக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று 9 அறிவிப்புகளை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வரும் ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்பதை உறுதியாக நம்புகிறேன். முன்பிருந்த அதிமுக அரசு, இவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்த நிலையில், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க இன்று முதல்-அமைச்சர் 9 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை காங்கிரஸ் சார்பாக மனதார வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். முதல்வர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கண்டனம் - அரசு ஊழியர்கள்
இதனிடையே, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்புகள் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் தருவதாக அரசு ஊழியர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டில் அரசு ஊழியர், ஆசிரியர்களிடமிருந்து 111-யை எதிர்நோக்கியே தமிழக முதல்வர் அவர்கள் விதி.110-இல் இவ்வறிப்பிப்புகளை வெளியிட்டுள்ளதாகவே தாங்கள் கருதுவதாகவும், 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அதற்கென ஒரு குழுவை அமைத்து, அறிவிப்பு வெளியிட்டு மூன்று மாதங்கள் ஆகியும் அதற்கான அரசாணையை நாளது தேதி வரையில் பொதுவெளியில் வெளியிடாமல், சங்கங்கள் கேட்டுக் கொண்டதற்காக ஒன்பது மாதம் என்பதை எட்டு மாதமாக குறைத்ததாகச் சொல்வது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications