பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்? அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை
சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காண, அமைச்சர்கள் குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் பிரதானமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஜாக்டோ - ஜியோ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து வருகின்றனர்... எனினும், தங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்று கூறி, ஆங்காங்கே போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள்..

10 அம்ச கோரிக்கைகள்
10 அம்ச கோரிக்கையே அவர்களது பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.. அதிலும், பெரும்பாலான அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டம்தான்.. இதிலுள்ள பலன்கள் பலவும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், அரசு ஊழியர் சங்கங்கள் பதவி உயர்வு, ஊதிய முரண்பாடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ-ஜியோ), புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே, போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன
நாளை போராட்டம் நடைபெறுமா
நாளையும் அதாவது செவ்வாய்கிழமையும், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ-அறிவித்துள்ளது. இதற்கிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, முடிவு எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழு அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்பு
இன்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் மேற்கண்ட 4 அமைச்சர்கள் கொண்ட குழு பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறது... இன்றைய தினம், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பர் என தெரிகிறது.. குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம் ஊள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்தும் ஜாக்டோ - ஜியோ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சர்கள் குழுவினரிடம் எடுத்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications