தண்ணில கண்டம்.. மழையைப் பார்த்தாலே பயம் வருதா? See.. இதான் பிரச்சனையே! அதென்ன ஓம்ப்ரோபோபியா?
சென்னை: மழைக்காலம் என்றாலே பலருக்கும் மகிழ்ச்சி நிறைந்த காலமாக இருக்கும். ஆனால் சிலருக்கு அது ஒரு அச்சம் தரும் காலம் என்பது பலருக்கும் தெரியாது. "ஓம்ப்ரோபோபியா" என்ற பிரச்சனை காரணமாக மழை பெய்யும் நேரங்களில் ஒருவகை பயத்தோடு இருக்கும் நபர்களும் இருக்கிறார்கள். சொல்லப்போனால் விவேக் ஒரு படத்தில் மழையைப் பார்த்து பயந்து பயந்து ஒளிந்து கொள்வாரே, கிட்டத்தட்ட இவர்களது மனநிலையும் அப்படித்தான் இருக்கும்..
மழைக்காலம் என்றாலே பலருக்கும் மனதிற்கு இனிமை தரும் ஒரு காலமாகும். மழைத்துளிகள் விழும் ஒலி, பூமியின் மணம், குளிர்ந்த காற்று இவை அனைத்தும் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் அளிக்கின்றன.
ஆனால், சிலருக்கு இதே மழைக்காலம் ஒரு இனிய அனுபவமாக இல்லாமல், பயங்கரமான அனுபவமாக மாறுகிறது. மழையைப் பற்றிய மிகுந்த அச்சம் அல்லது பயம் கொண்ட இந்த மனநிலை "ஓம்ப்ரோபோபியா" (Ombrophobia) எனப்படுகிறது.

ஓம்ப்ரோபோபியா
'ஓம்ப்ரோ' (Ombro) என்ற கிரேக்க சொல்லுக்கு மழை என்று அர்த்தம். 'போபியா' (Phobia) என்பது பயம். எனவே, ஓம்ப்ரோபோபியா என்றால் "மழைக்குப் பயம்" எனப் பொருள் கொள்ளலாம். இது ஒரு வகை அச்சச் சிக்கல் (Anxiety Disorder) தான் எனவும், அதே நேரத்தில், மனநிலை சார்ந்த சிக்கல் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். ஓம்ப்ரோபோபியா நிலையை அனுபவிக்கும் நபர்கள் மழை பெய்யும் சத்தத்தைக் கேட்டாலே பதட்டமடைவார்கள், சிலருக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கும், சிலர் திடீரென வியர்வை சிந்துவார்கள். சிலர் ஜன்னல் வழியே மழை விழுவதைப் பார்க்கவும் பயப்படுவார்கள். இந்த ஓம்ப்ரோபோபியா பிரச்சினை பொதுவாக குழந்தைப் பருவத்தில் இருந்து தான் ஆரம்பமாகும். சிறு வயதில் ஏற்பட்ட ஏதாவது ஒரு மனஅழுத்தமான அனுபவமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மழை பயம்
எடுத்துக்காட்டாக, இடியுடன் கூடிய மழையில் குழந்தை தனியாக இருந்தால் அல்லது வெள்ளப்பெருக்கால் பயமுற்ற அனுபவம் இருந்தால், அந்த நினைவு மனதில் பதிந்து விடும். பின்னர் வயது முதிர்ந்தபோதும் அந்த பயம் நீங்காமல், மழை பெய்தாலே திடீர் பதட்டம் ஏற்படும். மழைக்காலத்தில் இத்தகைய பயம் கொண்டவர்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கிறார்கள். சிலர் வீட்டுக்குள்ளும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று எண்ணி, மழை வரும் சத்தத்தைக் கேட்டாலே ஜன்னல்களை மூடி, காதை மூடி விடுவார்கள்.
சிபிடி சிகிச்சை
இது அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும். வேலைக்குச் செல்வது, பள்ளி அல்லது கல்லூரிக்குச் செல்வது, தேவையான வேலைகளைச் செய்வது எல்லாம் கடினமாகி விடும். மருத்துவ ரீதியாக இது ஒரு "ஸ்பெசிபிக் போபியா" (Specific Phobia) எனப்படும் மனநிலை. அதாவது, ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சூழலைப் பற்றிய அச்சம். இதற்கான சிகிச்சை மனநல ஆலோசனை வழியாக கிடைக்கக்கூடும். குறிப்பாக "காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி" (CBT) எனப்படும் சிகிச்சை முறை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மனநல பிரச்சனை
இதில், மருத்துவர் அந்த நபரை மழை குறித்து மெதுவாக மன ரீதியாக தயார் செய்யச் செய்வார். மேலும், யோகா, சுவாச பயிற்சி போன்றவை மனஅழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. இன்றைய மழைக்காலத்தில், ஓம்ப்ரோபோபியா கொண்டவர்கள் எதிர்கொள்ளும் மனநிலை பெரிதாக கவனிக்கப்படாமல் போகிறது. "மழைக்கு என்ன பயம்?" என்று பலர் இலகுவாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது உண்மையில் ஒரு மனநல பிரச்சனை என்பதை புரிந்துகொள்வது அவசியம். குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் இப்படிப்பட்டவர்களை விமர்சிக்காமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்து, தேவையானால் மனநல நிபுணர்களின் உதவியைப் பெறச் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications