அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் பறிமுதல்.. புகார் அளிக்கக் கட்டணமில்லா எண் அறிவிப்பு
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் வழக்கத்துக்கு மாறாகப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த சிறப்பு வாகன தணிக்கை குழு வரும் 10ஆம் தேதி வரை சோதனையில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாகப் புகார் அளிக்கக் கட்டணமில்லா எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பஸ், ரயில்களையே பெரிதும் நம்பியுள்ளனர்.
அதிலும் ரயில் டிக்கெட்கள் அனைத்தும் பல வாரங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடும் என்பதால், பெரும்பாலானோர் தேர்வு பேருந்துகளாகவே உள்ளது.

சிறப்புப் பேருந்துகள்
தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை சென்னையில் இருந்து மட்டும் 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தீபாவளி சமயத்தில் அதிக அளவிலான பயணிகள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால், இந்த சமயத்தைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அதிக கட்டணம்
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் வழக்கத்துக்கு மாறாகப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த சிறப்பு வாகன தணிக்கை குழு வரும் 10ஆம் தேதி வரை சோதனையில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்
இது தொடர்பாகச் சென்னை (வடக்கு) இணை போக்கு வரத்து கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில் நேற்று சென்னையில், ஆம்னி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு பேருந்தில் வாகனத்தில் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட அதிக கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகனம் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற திடீர் வாகன சோதனை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் மூலம் வரும் 10.11.2021 வரை கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிக்கும் மற்றும் தமிழ்நாடு உரியச் சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறைபிடிக்கப்பட்ட தெரிவிக்கப்படுகிறது.

கட்டணமில்லா எண்
எனவே, ஆம்னி பேருந்துகள் எப்பொழுதும் வசூலிக்கும் கட்டணத்தையே வசூலிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் சென்று வரத் தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது போன்ற அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிற்குப் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications