’இந்த’ தேதியில் வேண்டாம்.. பறந்த கோரிக்கை! ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா.. பஞ்ச் பேசிய தவெக விஜய்
சென்னை: செப்டம்பர் 22ஆம் தேதி நடிகர் விஜய் தனது "தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் நடத்த இருக்கிறார். இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து தொடர் சிக்கல்களை விஜயின் முதல் மாநில மாநாடு சந்தித்த நிலையில் மாநாட்டு தேதி குறித்து சில நிர்வாகிகள் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. என்ன நடக்கிறது தமிழக வெற்றிக்கழகத்தில்?
தமிழகத்தின் பிரபல நடிகராக வளம் வரும் விஜய் தற்போதைக்கு நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார். அவரது படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு வருகின்றன. மிகப்பெரிய ஹிட் இல்லை என்றாலும் கூட 200 கோடிக்கு மேல் அவரது ஒவ்வொரு படமும் வசூலிக்கிறது.

இப்படி சீரியஸான பிசினஸில் இருக்கும்போதே நடிப்பை விட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தது பலரது புருவத்தையும் உயர வைத்தது. மினிமம் கேரன்டி நடிகராக இருக்கும் விஜயை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வரிசையில் நிற்கும் நிலையில் விஜய் ஏன் இப்படி முடிவெடுத்தார் என அவரது ரசிகர்களே அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
நடிப்பு - அரசியல் என இரு குதிரைகளில் பயணம் செய்தால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை உணர்ந்தே அரசியலுக்கு வரும் முடிவை அடுத்து திரை வாழ்வுக்கு முழுக்கு போட்டு இருக்கிறார் விஜய். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கோட் படம் நிறைவடைந்ததும் மேலும் ஒரு படத்தில் நடித்துவிட்டு தீவிர அரசியலுக்கு வர இருக்கிறார் விஜய். 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என விஜய் அறிவித்திருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக பல்வேறு திட்டங்கள் அவரிடம் இருக்கிறது.
தொகுதி வாரியாக சுற்றுப்பயணம், மண்டலவாரியான மாநாடுகள் நடத்த திட்டமிட்டு இருக்கும் விஜய், தனது முதல் அரசியல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் செப்டம்பர் இறுதி வாரத்தில் நடத்த இருக்கிறார். பல இடங்களில் மாநாட்டுக்கான இடம் பார்க்கும் சரியாக இடம் அமையவில்லை. இறுதியாக திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டு நிலையில் குறைந்தபட்சம் மூன்று லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் வரை மட்டுமே அமர முடியும்.
அது மட்டுமில்லாமல் பார்க்கிங், உணவு சமைப்பது, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என்பதால் அதைவிட பெரிய இடத்தை பார்க்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் தற்போது விக்கிரவாண்டிக்கு மாநாடு மாற்றப்பட்டு இருக்கிறது. நமக்கு கிடைத்த தகவல் படி தற்போது செப்டம்பர் 22ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்,
செப்டம்பர் மாதம் மழை பெய்யும் மாதம் என்பதால் ஜனவரி அல்லது பிப்ரவரியில் மாநாட்டை நடத்தலாம் என சில 'சீனியர்' நிர்வாகிகள் விஜயிடம் சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் கோட் படம் வந்த சூட்டோடு சூடாக அரசியலில் குதிக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கும் விஜய் செப்டம்பர் மாதத்திலேயே மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார். செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அன்று முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரம் வருவதால் அன்று மாநாட்டை நடத்த வேண்டும் என கூறியதாக தகவல்கள் உலாவுகின்றன. ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையவரான விஜய் அந்த தேதியில் மாநாடு நடத்த சம்மதம் தெரிவித்தார். ஆனால் சில நிர்வாகிகளோ அந்த தேதியில் நடத்த வேண்டாம் என கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி தேய்பிறை ஆக இருப்பதால் வளர்பிறை வரும் தேதியில் மாநாட்டை நடத்த வேண்டும் என கூறி வருகிறார்களாம்..
மேலும் அந்த தேதியில், மாலை 4:31 முதல் 06:01 வரை ராகு காலம் என்பதால் அதற்கு முன்னரே மாநாட்டை தொடங்கி, 8 அல்லது 9 மணிக்கு மாநாட்டை முடிக்கும் திட்டமும் உள்ளது. இப்படியாக முதல் மாநில மாநாடு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது தேதியிலேயே குழப்பம் ஏற்பட்டிருப்பது நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது என்கின்றனர் நம்மிடம் பேசிய 'மலைக்கோட்டை' மாவட்ட கட்சியினர்.












Click it and Unblock the Notifications