குழி தோண்டுறாங்க! பாஜக பிளானே "அதிபர்தான்".. டெல்லி களமிறக்கிய மெகா திட்டம்! எச்சரிக்கும் எக்ஸ்பர்ட்
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரியான தேர்தல் இந்தியாவிற்கு சாத்தியம் இல்லாத ஒன்று, அரசியலமைப்பு சாசனத்தையே குழி தோண்டி புதைக்கும் காரியத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் இறங்கி உள்ளது, இந்தியாவில் அதிபர் தேர்தல் முறைக்கு இது விட்டுச்செல்லும் என்று மூத்த பத்திரிக்கையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு ஒரு தேர்தலை நாடு முழுக்க கொண்டு வருவதற்காக பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. 2024ல் ஒருநாடு ஒரு தேர்தலை நாடு முழுக்க கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக மக்களவையில் எம்பிக்கள் இருக்கும் கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து அதிமுக மட்டுமே இந்த ஒரு நாடு ஒரு தேர்தலை தீவிரமாக ஆதரிக்கிறது. அதிமுக இந்த முறையை ஆதரித்து உள்ளது. இந்த நிலையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரியான தேர்தல் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படும் என்று மூத்த பத்திரிக்கையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்த பேட்டியில், ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரியான தேர்தல் இந்தியாவிற்கு சாத்தியம் இல்லாத ஒன்று. ஆனால் மோடி அரசு நினைத்தால் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து அதை சாத்தியப்படுத்தலாம். அடிப்படையில் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல் இது. கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் காரியம் இது. தேர்தல் அடிக்கடி நடப்பது நாட்டிற்கு தேவை இல்லை என்ற கட்டுக்கதையை அவிழ்த்துவிடுவது பாஜகதான். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் மாநில அரசு இடையில் கவிழ்ந்தால் என்ன செய்வார்கள். நிரந்தரமான சட்டமன்றம், நிரந்தரமான நாடாளுமன்றம் என்பது எப்படி சாத்தியம்?

ஆட்சி கவிழ்ந்தால்
திடீரென ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்வார்கள். மாநில ஆட்சி கவிழ்ந்தது என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி வரவில்லை என்றால் என்ன செய்வார்கள். அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வர முடியாதே? அதற்கும் சட்ட திருத்தம் கொண்டு வரும். அப்படி கொண்டு வந்தால் அது கிட்டத்தட்ட அதிபர் முறை ஆட்சி போல ஆகிவிடும். நாடாளுமன்ற முறை, பிரதமர் முறைதான் நம்மிடம் உள்ளது. அதிபர் முறை என்பது சர்வாதிகாரத்திற்கு விட்டு செல்லும் என்றுதான் அந்த முறையை நாம் கொண்டு வரவில்லை. அதனால்தான் பிரதமர் முறையை நாம் கொண்டு வந்துள்ளோம்.

அரசியலமைப்பு சாசனம்
ஆனால் அந்த அரசியலமைப்பு சாசனத்தையே குழி தோண்டி புதைக்கும் காரியத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் இறங்கி உள்ளது. அடிக்கடி தேர்தல் நடப்பதால் செலவு நடக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வருடம் நடக்கும் எல்லா தேர்தலையும் சேர்த்தாலும், மக்களவை தேர்தலையும் சேர்த்தாலும் மொத்தம் 8 ஆயிரம் கோடி ரூபாய்தான் செலவாகிறது. ஒரு ஆளுக்கு 27 ரூபாய்தான் செலவு ஆகிறது. தேர்தல் நடக்கும் அந்த குறிப்பிட்ட காலம் என்பது சராசரியாக 15 நாட்கள்தான். இந்த 15 நாட்களில் என்ன பெரிதாக இவர்கள் சாதித்துவிட போகிறார்கள்.

சுதந்திரம்
இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் சர்வாதிகாரத்திற்குள் மாட்டிக்கொண்டன. ஆனால் இந்தியா மட்டும் தப்பிக்க காரணம் இந்த தேர்தல்கள்தான். அடிக்கடி தேர்தல் நடப்பதால் வானம் ஒன்றும் உடைந்துவிடும். இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியலமைப்பு சட்டத்தை எதிர்க்க கூடிய, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற துடித்துக்கொண்டு இருக்க கூடிய, இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட மறுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டம்தான் இது. 2024 ல் மோடி மீண்டும் வென்றால், இந்திய ஜனநாயக சவக்குழிக்குள் செல்வதை ஆர்எஸ்எஸ் உறுதிப்படுத்தும்.

செருப்பு
காலுக்கு ஏற்றபடிதான் செருப்பு இருக்கும். செருப்புக்கு ஏற்றபடிதான் கால் இருக்க வேண்டியது இல்லை. இவர்கள் கொண்டு வரும் ஒரு நாடு ஒரு தேர்தல் அப்படித்தான். செலவு முக்கியமா ஜனநாயகம் முக்கியமா என்பதைதான் பார்க்க வேண்டும். வெறும் 8 ஆயிரம் கோடி செலவாகிறது என்பதற்காக இவர்கள் அயோக்யத்தனமாக இந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இவர்கள் அதிபர் தேர்தல் ஆட்சி முறையை நோக்கி கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்கள். அடிப்படை ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத ஆர்எஸ்எஸ் போட்டுக்கொடுத்த திட்டம்தான் இது, என்று மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications